ஓ… இப்படித்தான் கூட்டம் வந்துச்சா..? அமைச்சர் பங்கேற்ற கிராம சபை கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள்சேர்ப்பு : வைரலாகும் வீடியோ!

Author: Babu Lakshmanan
28 January 2023, 5:32 pm
Quick Share

அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்ட கிராம சபை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு திமுக ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மக்களிடம் சிறப்புரையாற்றி பின்னர் மக்கள் குறையை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் வேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டம் முடிந்து பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் அங்கிருந்து கிளம்பாமல் வெகு நேரம் காத்துக்கிடந்தனர்.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் சார்பில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசவும், கேட்கவும் வந்தார்களா..? இல்லை, அமைச்சர் வருகிறார் என்பதால் கூட்டத்தை சேர்ப்பதற்காக பணம் கொடுத்து அழைத்து வந்தார்களா..? என்ற ஒரு கேள்வி இந்த பணம் பட்டுவாடா செய்யும் காட்சியை பார்க்கும்போது எழுகிறது.

அமைச்சர் கலந்துகொள்ள உள்ள கிராம சபை கூட்டம் என்பதால், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மக்கள் அதிகம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காக, பணம் கொடுப்பதாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வந்து கிராம சபை கூட்டத்தில் அமர வைத்து இறுதியில் பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Views: - 259

0

0