பிரசவம் பார்ப்பது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல : மகப்பேறு விஷயத்தில் விளையாடக் கூடாது… அன்புமணி எச்சரிக்கை..!!!

Author: Babu Lakshmanan
20 December 2021, 2:05 pm
anbumani warn - updatenews360
Quick Share

யூடியூப் பார்த்து கணவரே பிரசவம் செய்வது, ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தனது சகோதரியின் உதவியுடன், கோமதிக்கு அவரது கணவன் லோகநாதன் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதில், ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், குழந்தையின் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், யூடியூப் மூலம் பிரசவம் பார்ப்பது மாபெரும் குற்றம் என்று கூறி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாமக எம்பி அண்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து டுவிட் போட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- அரக்கோணம் மாவட்டம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது!

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்!

மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்! யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 582

0

0