பதவிக்காக நீதிமன்றத்தை ஏமாற்றுவது நியாயமா..? நீக்குவாரா ஸ்டாலின்…? மதிப்பாரா திருமா..? எம்பி ரவிக்குமார் விவகாரத்தில் பாஜக கேள்வி..!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 8:05 pm
thiruma - ravi - stalin - updatenews360
Quick Share

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார் திமுக சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர், வேறு கட்சியின் சின்னத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை உறுப்பினர் அல்ல என்றும் எம்பி ரவிகுமார் பதில் மனு தாக்கல்செய்திருந்தார். இது அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பூனா ஒப்பந்தம் என்ற பெயரில் இணையவழி கருத்தமர்வு இன்று மாலை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அழைப்பிதழ் ஒன்றை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்கவுரை ஆற்றவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மேலும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. மேலும், எதிர்கட்சியினர் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :- நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. தி மு க உறுப்பினர். வி சி க வின் வேட்பாளர் தி மு கவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தான் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள்.

ஆனால் இன்று நடைபெறும் விசிக நிகழ்ச்சியில், அந்த கட்சியின் பொது செயலாளராக பங்கு பெறுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? மேலும், தாங்கள் எதை செய்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது, மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திரு. ரவிக்குமார் அவர்களை திமுகவிலிருந்து நீக்குவாரா? திருமாவளவன் நீதிமன்றத்தையும், மக்களையும் மதிப்பாரா? திரு.ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா? பதவிக்காக பொய் சொல்லி தேர்தலில் நிற்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் நியாயமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் இந்தக் கேள்வியை தொடர்ந்து யார் நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 244

0

0