ரத்தான 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடரும் : அண்ணா பல்கலை., விளக்கம்
8 February 2021, 5:36 pmசென்னை : ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி உள்ளிட்ட இரு மேல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து நுழைவுத் தேர்வு எழுதிய மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தை காட்டி பணத்திற்காக படிப்பை ரத்து செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு ஏற்புடையதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் பேசி நல்ல முடிவை எடுக்குமாறு தெரிவித்தனர். நிதியுதவி ஏதேனும் தேவைப்பட்டால் தமிழக அரசை நாடவும் அறிவுறுத்தினார்.
மருத்துவப்படிப்பில் 69%. நடைமுறை கடைபிடிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இந்த எம்.டெக். படிப்பில் மட்டும் ஏன் குழப்பம் என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்.டெக். படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை கழகம் பதிலளித்துள்ளது. அதாவது, எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
0
0