கேரள அரசிடம் மண்டியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்… எல்லாம் எதுக்காக தெரியுமா..? போட்டுத் தாக்கிய அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
8 November 2021, 5:53 pm
annamala - stalin - mullai-periyar - updatenews360
Quick Share

தேனி : முல்லைப் பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, கேரளாவின் கோரிக்கையை ஏற்று,அணையில் இருந்து தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 138 அடியாக இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதால், அணையை கேரளாவுக்கு அடகு வைத்ததற்கு நிகராகிவிட்டதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணாமலை பேசியதாவது :- முல்லைப் பெரியாறு அணையை திறந்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார். அணையை திறப்பது பற்றி எங்களிடம் சொன்னாங்க… ஆனா, சொல்லல.. என வடிவேலு போல பேசாமல், முதலமைச்சர் போல பேச வேண்டும். அணை திறப்பது பற்றி சொல்லியிருந்தால் அமைச்சர் மற்றும் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ஏன் செல்லவில்லை..? என்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

கோபாலபுரத்திற்கு சொந்தமாக எந்த விவசாய நிலமும் இந்த ஐந்து மாவட்டங்களில் இல்லை என்பதற்காகவும், முல்லைப் பெரியாறு அணையினால் எந்த பயனும் உங்களுக்கு இல்லை என்பதாலும், இந்த அணையின் கதவை எப்படி வேண்டுமானாலும் திறந்து விடுவீர்கள்.

நேற்று பேபி அணைக்கு அருகே உள்ள மரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததற்கு நன்றி எனக் கூறி, கேரள அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், கேரள அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனக் கூறி விட்டது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, இதைக் கூட தெரியாமல் ஆட்சி செய்தால், இன்று சென்னையில் என்ன நடக்கிறதோ..? அதுதான் நடக்கும், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதே பத்திரிக்கையாளர்களின் கேள்வி. திமுக அரசு செய்த செயல் தமிழக மக்களுக்கு செய்த துரோகமாகும். 138.5 அடி தண்ணீர் வரும் வரை முல்லை பெரியாறு அணையில் யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையை இயக்க தமிழகத்திற்கு தான் உரிமை இருக்கிறது.

இப்படியிருக்கையில் கேரள அமைச்சர், அதிகாரிகள் சேர்ந்து அணையை திறந்துள்ளனர். தமிழகம் சார்பில் இளநிலை பொறியாளர் ஒருவர் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை கேரள அரசிடம் மண்டியிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் சரணடைந்து விட்டார். முல்லை பெரியாறு அணையின் இருப்பும், உயரமும் பிரச்சனையல்ல. 108 அடிக்கு மேலாக இருக்கும் தண்ணீரை மட்டுமே எடுக்க முடியும். 2 லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்த பாசன வசதி, 71 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்ததுதான்.

மற்ற அணைகளை போல அல்ல. முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரையில் தண்ணீர் முழுமையாக தமிழகத்திற்கும், தமிழக விவசாயத்திற்கும் வரவே 1886ல் ஒப்பந்தம் போட்டிருக்கின்றோம். உடனடியாக 5 மாவட்ட மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். 142 அடியை உயர்த்த முழு நடவடிக்கை எடுத்து தமிழக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். முதலமைச்சரின் தனிப்பட்ட சொத்து தமிழகம் அல்ல.

கோபாலபுரத்தினருக்கு ஒன்னு சொல்லிக் கொள்கிறேன். இந்த முறை உங்க பருப்பு வேகாது. தப்பு பண்ணீட்டீங்க. மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் இசைவோடு திறந்திருப்பது உண்மையென்றால், தேனி மற்றும் இடுக்கி ஆட்சியர்கள் ஏன் இல்லை..? பேபி அணை அருகே மரம் வெட்ட கேரளா அனுமதி கொடுக்காத நிலையில், பிறகு எதற்கு நன்றி சொல்லி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்..?அதற்கு முதலமைச்சர் பதில் சொல்லி இருக்கிறாரா..?

ஒவ்வொரு முறையும் பாஜகவும், தலைவர்களுக்கு செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினிடம் இந்தக் கேள்விகளுக்கு பதில் பெறும் திராணி செய்தியாளர்களிடம் இருக்கிறதா..?/

காவேரி பிரச்சனையில் ஆணையம் அமைத்து தலைவர் நியமனம் செய்து முடித்துக் கொடுத்துள்ளோம். மேகதாது குறுக்கே அணையை கட்ட முடியாது என்று நாடாளுமன்றத்தில் பாஜக கேபினட் அமைச்சர் பதில் அளித்துள்ளார். அதேபோல, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் இருப்பை தேக்கி வைக்கவும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு மேல் மத்திய அரசை திமுக இழுப்பது எந்தவிதத்தில் நியாயம். தமிழகத்தின் உரிமையை கேரளாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தாரை வார்த்திருப்பது துணை பிரதமர் கனவில் இருப்பதால்தான், என அதிரடியாக பேசியுள்ளார்.

Views: - 642

1

0