ஆம், எனக்கு அருகதை இல்லை… சிகரம் தெரிந்த நீங்கள் இப்ப வேடிக்கை பார்ப்பது ஏன்..? வைகோவுக்கு அண்ணாமலை பதிலடி

Author: Babu Lakshmanan
13 November 2021, 4:35 pm
annamalai- mullai dam - vaiko - updatenews360
Quick Share

சென்னை : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வைகோவின் விமர்சனத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கேரள அரசின் இசைவுடன் தமிழக அரசு திறந்து விட்டது பெரும் சர்ச்சையாகிவிட்டது. இந்த விவகாரத்தில் அதிமுக பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும், பாஜக இதனை விட்டபாடில்லை. அணையை திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதித்தாரா..? அல்லது கேரள அரசு அத்துமீறி திறந்துவிட்டதா..? என்பதை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் கண்டித்து கடந்த 8ம் தேதி போராட்டம் நடந்த போதும், பேபி அணையில் மரம் வெட்ட அனுமதியளித்தது குறித்து தமிழக அரசுக்கு கேள்விக்கு மேல் கேள்வி அடுக்கி வருகிறார்.

இதனிடையே, முல்லைப்பெரியாறு விவகாரத்தை அண்ணாமலை தொடர்ந்து கையில் எடுத்து பேசி வந்ததற்கு, திமுக கூட்டணி கட்சியான மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்த அணை தொடர்பாக அகரம் கூட அவருக்கு தெரியாது எனக் கூறி, ஒன்னும் தெரியாத முன்னாள் போலீஸ் அதிகாரி எனவும் காரசாரமாக விமர்சித்திருந்தார்.

Vaiko Condemned -Updatenews360

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வைகோவின் விமர்சனத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- இலங்கை தமிழர்‌, காவிரி நதிநீர்‌, மீனவர்‌ இன்னல்‌, என பல பிரச்சனைகளுக்கு எழுச்சி உரை நிகழ்த்தி போராட்டம்‌ நடத்திய வைகோ முல்லைப்‌ பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரை வார்த்து, அணையின்‌ மதகுகளை கேரளா அமைச்சர்‌ திறந்தபொழுது, தமிழக விவசாயிகள்‌ துடிதுடித்துப்‌ போனார்களே, அப்போது துடிப்புடன்‌ துயர்துடைக்க, வைகோ போராட வருவார்‌… வருவார்‌… என்று எண்ணி விவசாயிகள்‌ காத்திருந்தார்கள்‌.

முல்லைப்பெரியாறு அணைக்கு நான்‌ நான்கு முறை போராட்டம்‌ நடத்திவிட்டேன்.‌ அது முடிந்து போன பிரச்சனை என்று தன்‌ அறிக்கையில்‌ முழங்கி இருக்கிறார்‌ வைகோ. ஆனால்‌ இப்போது திமுகவின்‌ அக்கறையின்மையால்‌, ஆளுமைக்குறைவால்‌ புதிதாக உருவான பிரச்சனையை, விவசாயிகளின்‌ தவிப்பை அவர்‌ கண்டு கொள்ளவே இல்லை என்று பாஜக தேனி ஆர்ப்பாட்டத்தில்‌ விவசாயிகள்‌ ஆதங்கப்பட்டார்கள்‌.

Vaiko Stalin- Updatenews360

மக்களுக்கு ஆதரவான எங்கள்‌ போராட்டத்திற்கு ஆதரவுக்‌ கரம்‌ வேண்டிதானே விவசாயிகள்‌ சார்பில்‌ அவர்கள்‌ ஆதங்கம்‌ தீர்க்க ஐயா வைகோ அவர்களுக்கு தேனி ஆர்ப்பாட்டத்தில்‌ அழைப்பு விடுத்தேன்‌. வெறும்‌ போலீஸ்தானே என்று என்னை இழுத்துரைப்பதாக நினைத்து, ஒட்டு மொத்த காவல்துறையையே இழிவுபடுத்துயிருக்கிறார்‌ வைகோ. போராட்டம்‌ முடிந்த நான்கு நாட்களுக்குப்‌ பிறகு மெதுவாக வாய்‌ இறப்பது… அவருக்கு பாஜகவின்‌ போராட்டத்தால்‌, விவசாயிகளால்‌ ஏற்பட்ட
அழுத்தத்தாலா? அல்லது ஆளும்கட்‌சிக்கு ஒத்து ஊதும்‌ அரசியலா? இந்த உங்கள்‌ அறிக்கையில்‌ கூட முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிற்கு தாரை வார்த்த திமுக அரசிற்கு ஒற்றைக்‌ கண்டனம்‌ கூட தெரிவிக்கவில்லையே ஏன்‌? வைகோ அவர்களே.

வாரிசு அரசியலை எதிர்த்து வாள்‌ வீச, பின்பு அக்கட்சியிலேயே வாரிசுக்கு சாமரம்‌ வீச, தங்கள்‌ கட்சியிலும்‌ வாரிசை ஐக்‌கியமாக்‌க, வாரிசு அரசியலுக்கு வாக்கப்பட்ட உங்களைப் பற்றி பேச பாஜகவிற்கோ, எனக்கோ அருகதை இல்லை என்பது உண்மைதான்‌ வைகோ அவர்களே.

annamalai bjp - updatenews360

முல்லைப்‌ பெரியாறு பற்றி அகரம்‌ தெரியாத அண்ணாமலை உங்கள்‌ பெயரை உச்சரிக்கக்‌ கூடாது என்று அறிவித்துள்ளீர்கள்‌, நன்றி, ஆனால்‌ அதன்‌ சிகரம்‌ தெரிந்த நீங்கள்‌ ஏறியிருக்க வேண்டாமா? மக்கள்‌ பிரச்சனைக்காக, விவசாயிகளுக்காக நான்‌ போராடும்‌ போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரைத்‌ திருப்‌திபடுத்த.

காலம்‌ காலமாக தமிழகத்தில்‌ போராட்டத்திற்கு மட்டும்‌ பயன்பட்ட காவிரி நதிநீர்‌ பிரச்சனைக்கும்‌, மீனவர்‌ பிரச்சனைக்கும்‌ தீர்வுகண்ட கட்சி பாஜக தான்‌. ஆகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து போராடவும்‌, பேசவும்‌, முழு உரிமையும்‌, முழுத்‌ தகுதியும்‌ உள்ள ஒரே கட்சி பாஜக என்பதை மக்கள்‌ அறிவார்கள்‌, எனக் கூறியுள்ளார்.

அண்ணாமலையின் கேள்வியைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு செய்த நடவடிக்கையை வைகோ ஆதரிக்கிறாரா…? என்ற கேள்வி எழுந்துள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Views: - 299

0

0