முல்லைப்பெரியாறு அணை விவகாரம்… நீதிமன்றத்தை அவமதிக்கும் கேரளா : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கொடுத்த ஐடியா..!!!

Author: Babu Lakshmanan
31 January 2022, 4:23 pm
Quick Share

சென்னை : முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய நீர்வள ஆணையத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முல்லைப் பெரியாறு அணை குறித்த தனது 27.02.2006 ஆம் தேதிய தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு அனுமதி அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் கேரள அரசு தனது ஒத்துழைப்பை நல்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்தப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்க கேரளா மற்றும் அதன் அதிகாரிகளுக்கு தடை விதிப்பதாகவும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதனை தனது 07.05.2014 நாளை தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

உச்ச நீதிமன்ற ஆணையின்படி, பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக கேரள மாநில வனப் பகுதியில் மரங்களை வெட்டவும், அணுகு சாலையில் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் கேரள அரசு அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை ஆறு ஆண்டுகள் கழித்து 2021 ஆம் ஆண்டு கேரள அரசு வழங்கியது.

ஆனால், அதனை அரசியலாக்கி அனுமதி வழங்கிய இந்திய வனப் பணி அதிகாரியான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்திய அதிகாரியை பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்பதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று நான்கூட அறிக்கை வெளியிட்டு இருந்தேன். பின்னர் அந்த அதிகாரியின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவிட்டது என்றாலும் மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் தேவையான அனுமதியை தமிழகத்துக்கு கேரள அரசு இதுவரை வழங்கவில்லை.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டுதல் மற்றும் அணுகு சாலையை சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை அளிப்பதில் கேரள அரசு காலந்தாழ்த்தி வருகிறது.தற்போதுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல வேண்டுமென்றால் படகு மூலமாகத்தான் செல்ல வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை மலைச் சாலையை சரிசெய்த பின் அந்தச் சாலை வழியாக கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு செயல்படுவதன் காரணமாக அணுகு சாலையை சரி செய்யவோ அல்லது அங்குள்ள மரங்களை வெட்டவோ முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுகுறித்து கண்காணிப்புக் குழு முன்பு பலமுறை தமிழக அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும், கேரள அரசினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உண்மை நிலை இவ்வாறிருக்க, அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்யாமல், அதை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.

மத்திய நீர்வள ஆணையத்தின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளாவிற்கு துணை போவது போல் அமைந்துள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு.

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை வலுப்படுத்தும் வகையில் மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் அனுமதி வழங்குமாறு கேரள அரசிற்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இது மட்டுமல்லாமல் இதனை பாரதப் பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய நீர்வள ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மறுஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 1217

0

0