தொழிலாளி கொலை வழக்கு : திமுக எம்பி ரமேஷுக்கு 13ம் தேதி வரை காவல்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
11 October 2021, 1:59 pm
cuddalore mp ramesh - updatenews360
Quick Share

சென்னை : முந்திரி ஆலை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் திமுக எம்.பி. ரமேசுக்கு சொந்தமான காயத்ரி முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராசு என்பவர் கடந்த செப்.,20ம் தேதி கொலை செய்யப்பட்டார். திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது நெருங்கிய நபர்கள் சேர்ந்து, கோவிந்தராசுவை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், திமுக எம்பி ரமேஷ் இந்த கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்து வழக்கும்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலை மறைவாக இருந்து வந்த திமுக எம்பி ரமேஷ், இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே, தன்‌ மீது சுமத்தப்பட்டுள்ள புகார்‌ ஆதாரமற்றது என்பதை சட்டத்தின்‌ முன்பு உரிய ஆதாரங்களுடன்‌ நிரூபித்து வெளியே வருவேன்‌ என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முந்திரி ஆலை தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷை அக்.,13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திமுக தலைமைக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்களே ஆன நிலையில், சொந்த கட்சி எம்பி, இப்படி கொலை வழக்கில் சிக்கியிருப்பது பெரும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியாயிற்று.

முன்னதாக, கடலூர் திமுக எம்பி ரமேஷை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். எனவே, விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Views: - 473

0

0