முஸ்லிம்கள் ஓட்டு முழுமையாக கிடைக்குமா ? புதிய புள்ளி விவரத்தால் திமுக பீதி!!

Author: Babu Lakshmanan
29 March 2021, 12:18 pm
Dmk - islamic - updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் சேப்பாக்கம், துறைமுகம், ஆயிரம்விளக்கு, பூங்காநகர், ராயபுரம், நாகைப்பட்டினம், கடையநல்லூர் வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, நெல்லை, கிருஷ்ணகிரி, பாளையங்கோட்டை திருவாரூர், திண்டுக்கல், பரமக்குடி, ராமநாதபுரம், நன்னிலம், முதுகுளத்தூர் திருவாடானை, கடலாடி, கோவை மேற்கு, மதுரை மத்தியம், அரவக்குறிச்சி, நத்தம், வேப்பனஹள்ளி, பெரியகுளம், திருச்செந்தூர்,கரூர், திருச்சி கிழக்கு, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, கம்பம் என 35 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.

இவற்றில் 15 தொகுதிகளில் சுமார் 75 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை முஸ்லிம் வாக்காளர்களும், எஞ்சிய 20 தொகுதிகளில் 35 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை முஸ்லிம் வாக்காளர்களும் இருப்பதையும் வாக்காளர் பட்டியல் மூலம் அறிய முடிகிறது. அதாவது, இந்த தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் மொத்தமாக யார் பக்கம் சாய்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலை. அந்த அளவிற்கு வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இந்த தொகுதிகளில் முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.

இத்தனை தொகுதிகளில் கணிசமாக இருந்தும் ஒருமுறை கூட தமிழக சட்டப்பேரவைக்கு பிரதான கட்சிகளின் சார்பில் அதிக அளவில் முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பது இஸ்லாமியர் அரசியல் கட்சிகளின் கவலையாக உள்ளது.

பெரும்பாலான தேர்தல்களில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்தபோதிலும் கூட அக்கூட்டணியில் போட்டியிடுவதற்கு அதிகபட்சமாக 15 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பு கிடைத்ததில்லை. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதுதவிர திமுக சார்பிலும் சில முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அதிமுகவிலும் சில முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Asaduddin_Owaisi_UpdateNews360

டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள இஸ்லாமியர் கட்சிகளான SDPI 6 தொகுதிகளிலும், ஓவைசியின் AIMIM கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டில் தினகரன் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று நம்பி இந்த இரு கட்சிகளும் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளன.

இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் 10-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஏராளமானோர் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர். ஆனால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தவிர மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.

கடந்த சில தேர்தல்களாக தமிழகத்தில் முஸ்லிம் வாக்குகள் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கே கிடைத்து வந்துள்ளது. அதாவது 100 சதவீத ஓட்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில் 80 சதவீத ஓட்டுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது. எஞ்சிய 20 சதவீத ஓட்டுகள்தான் அதிமுக கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்கு முழுமையாக அப்படியே, திமுக கூட்டணிக்கு கிடைக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதற்கு பல காரணங்கள் உண்டு.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பின் கீழ் மொத்தம்
2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சாதி, மத பேதமின்றி தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக
இத்திட்டத்தின்கீழ் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் மட்டும் 3 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இதில் சுமார் 45 ஆயிரம் முஸ்லிம் குடும்பத்தினரும் அடங்குவர்.
இது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆகும்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச்சட்டம் 18 வயது முதல் 28 வரையிலான முஸ்லிம் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கல்லூரிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளிடம் முத்தலாக் தடை சட்டத்திற்கு மிகுந்த ஆதரவு கிடைத்திருப்பதாக கள ஆய்வில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த வயதினரில் மட்டும் சுமார் 47 சதவீதம் பேர் வரை அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் 15 சதவீதம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 80 சதவீத முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்கும் என்கிற நிலையில் மேலும் 15 சதவீதம் குறைவது திமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
அதாவது தொகுதிக்கு 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கு குறைவாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம்தமிழர் கட்சி ஆகியவையும் கணிசமான முஸ்லிம்களின் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் 12 முதல் 15 ஆயிரம் ஓட்டுகள் வரை திமுக கூட்டணிக்கு கிடைக்காமல் போய் அங்கு அதிமுக கூட்டணி வெற்றி பெறும் சூழல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் தொழிலதிபர்களில் பெரும்பாலானோர் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என்பதும் ஒரு கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், மாநிலத்தில் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அடுத்த 3 ஆண்டுகள் மத்திய பாஜக அரசுடன், திமுக இணக்கமாக செல்லாது. மத்திய அரசு கொண்டு வரும் அத்தனை திட்டங்களையும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் போல கண்களை மூடிக்கொண்டு எதிர்க்கும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதி கிடைப்பதும் சிரமம். இதனால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு தொழிலை சுமுகமாக நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என்று இந்த தொழிலதிபர்கள் கருதுகின்றனர்.

அதிமுக ஆட்சியில், இதுவரை யாரும் தொழிலதிபர்களுக்கு நெருக்கடி கொடுத்தது இல்லை என்ற நல்ல பெயரும் உள்ளது. அதனால் அதிமுக அரசு தொடர்ந்து நீடிப்பதே நல்லது என்று முஸ்லிம் தொழிலதிபர்கள் பலர் கருதுகின்றனர். எனவேதான் கடந்த முறை திமுக கூட்டணிக்கு கண்டிப்பாக வாக்களிக்கும்படி தங்களிடம் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உத்தரவிட்ட இவர்கள் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று மறைமுகமாக கூறி வருகின்றனர். இதுவும் அதிமுகவுக்கு ஒரு சாதகமான அம்சம்.

corona vaccine cm- Updatenews360

மேலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்று திமுகவினர் கூறி வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் கறாராக 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதை முஸ்லிம்கள் வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் அது தனது தனித்தன்மையை இழந்து விடாமல் மத்திய அரசுடன் இடைவெளியை கடைப்பிடிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
இதுவும் அதிமுகவுக்கு சாதகமான மற்றொரு அம்சம்.

இப்படி பல்வேறு வழிகளில் அதிமுக கூட்டணிக்கு 35 சதவீத முஸ்லிம் வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால் திமுகவுக்கு முஸ்லிம் வாக்குகள் இந்தத் தேர்தலில் முழுமையாக கிடைக்குமா? என்பது சந்தேகமே என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதிலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது!

Views: - 181

2

0

1 thought on “முஸ்லிம்கள் ஓட்டு முழுமையாக கிடைக்குமா ? புதிய புள்ளி விவரத்தால் திமுக பீதி!!

Comments are closed.