ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் : தேர்தலில் சீமான் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?

8 March 2021, 1:12 pm
Seeman cover - updatenews360
Quick Share

2016 சட்டசபை தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாம் தமிழர் கட்சியின் சீமான், தனது ஆவேச பேச்சு மூலம், அரசியல் களத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

தமிழில் சரளமாக பேசுவது, சில நேரங்களில் கருணாநிதிபோல் இலக்கியத்துக்குள் புகுந்து மேற்கோள் காட்டுவது, தமிழர், பண்டைய தமிழகத்தின் பெருமை பேசுவது போன்றவை சீமானுக்கென்று அரசியலில் ஒரு தனி ஈர்ப்பு வட்டாரத்தை உருவாக்கி இருப்பது நிஜம்.

1940களில் சி.பா.ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் இயக்கத்தை 2010-ல் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்த சீமான், 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் காங்கிரசுக்கு எதிராக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம், இலங்கையில் நடந்த தமிழர் இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ்தான் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

Seeman_EPS - upddatenews360

கடந்த 2016-ம் ஆண்டு ‘மாற்று அரசியல்’ என்னும் முழக்கத்துடன், முதல் முறையாக தமிழக தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அவரும் கடலூரில் களம் இறங்கினார். என்றபோதிலும் அவருடைய கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அவர் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் சுமார் 12 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார்.

அந்தத் தேர்தலில் அவருடைய கட்சிக்கு மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. அதாவது பதிவான மொத்த ஓட்டுகளில் நாம் தமிழர் கட்சி பெற்றது, ஒரு சதவீத வாக்கு மட்டுமே.

அதேநேரம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் 20 பேர் பெண் வேட்பாளர்கள். ஆணும் பெண்ணும் சமம் என்கிற கோட்பாட்டில் இப்படி அவர் தொகுதிகளை சரிபாதியாக பகிர்ந்து கொடுத்தார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் சீமானே எதிர்பாராத அளவிற்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சுமார் 16 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகளை அள்ளியது.

ஓட்டு சதவீதக் கணக்கில் இது 4 விழுக்காடு ஆகும். இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் அவர் மோதவேண்டி இருந்தது.

இந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் சீமானுக்கு பெரும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அதனால், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தன்னால் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியும் விட்டார்.

எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுவதால் தனது கட்சியினர் இந்த முறை சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள் என்ற நம்பிக்கையில் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த தேர்தல் மாநாட்டில் சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தும் வைத்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால் நிச்சயம் அவரை எதிர்த்து களம் காண்பேன் என்று அறிவித்திருந்த சீமான் தற்போது தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு, கடலோர தொகுதியான திருவொற்றியூருக்கு தாவி விட்டார். எண்ணூர் பகுதியில் கொட்டப்படும் சாம்பல் கழிவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, போட்டியிடும் தொகுதியை மாற்றிக் கொண்டதாக சீமான் காரணம் சொல்கிறார்.

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என்று அத்தனை கட்சிகளையும் சீமான் கடுமையாக தாக்கிப் பேசுவதால், அரசியலில் மாற்றத்தைக் காண விரும்பும் நடுநிலை வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சீமான் கட்சியை ஆதரிப்பதால், அவருக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் சற்று அதிகரிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

vaiko - seeman 1 - updatenews360

அதேநேரம், நாம் தமிழர் கட்சியின் வரவால் மதிமுகவின் செல்வாக்கு சரிந்து விட்டதாக ஒரு கருத்தும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. இது உண்மையாக இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், 2016 தேர்தலுக்கு முன்பு வரை மதிமுகவுக்கு கிடைத்து வந்த ஓட்டு மூன்று சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது. அது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திடீரென்று ஒரு சதவீதமாக குறைந்தது.

தனது அனல் தெறிக்கும் பேச்சால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கென்று ஒரு செல்வாக்கை பெற்றிருந்தார். குறிப்பாக அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாக சந்தித்து வந்தவர் என்பதால், வைகோவின் பேச்சில் இலங்கை தமிழர் பிரச்சனை, 2009-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலை, ராஜபக்சே அரசு மீதான சர்வதேச போர்க் குற்ற விசாரணை, கச்சத்தீவு மீட்பு, தமிழக மீனவர்கள் பிரச்சனை போன்றவை அவருடைய பேச்சில் மிக விரிவாகவே இருக்கும். அதை வேறு நாடுகளில் உள்ள சர்வதேச பிரச்சனைகளுடன் ஒப்பிட்டும் மணிக்கணக்கில் பேசுவார், வைகோ.

கடந்த 10 ஆண்டுகளாக, சீமானும் இதில் வைகோவுக்கு போட்டியாக இறங்கி விட்டார் என்ற பேச்சும் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், தனித்தே போட்டி, யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவுடன் தேர்தலை சந்திப்பதால்தான், நாம் தமிழர் கட்சிக்கு சிறிது செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும், வைகோ போலவே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது, தொடர்ந்து மணிக்கணக்கில் பேசி கேட்பவர்களை சோர்வடைய வைப்பது, எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும், இலங்கை தமிழர் பிரச்சினையையும், விடுதலைப்புலிகளையும் தொடர்பு படுத்தி பேசுவது போன்றவை அவருடைய அரசியல் பயணத்திற்கு தடைக்கற்களாக உள்ளன என்று கூறப்படுகிறது.

seeman - updatenews360

அதேபோல், எதற்கெடுத்தாலும் போராட்டம், புரட்சி வெடிக்கும் என்று கொந்தளிப்பாக பேசுவது அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக அமையும். ஏனென்றால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி உணர்ச்சி பெருக்குடன் பேசி மக்களை எப்போதும் கொதி நிலையில் வைத்திருக்க விரும்பிய சில கட்சிகள் இன்று கரைந்து, காணாமல் போய் விட்டன என்பதையும், மக்கள் அமைதிச் சூழல் வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதையும் சீமான் உணரவேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மறைந்த தலைவர்களைப் பற்றி குறிப்பிட்டு சீமான் பேசும்போது, “கருணாநிதியின் சட்டைப் பையில் இருந்து பேனாவை உரிமையோடு எடுத்து எழுதி விட்டு திரும்பவும் வைப்பேன். அந்த அளவுக்கு அவருடன் எனக்கு மிகுந்த நெருக்கம் உண்டு என்று சொல்வது, இலங்கை ராணுவத்துடன் உச்ச கட்டப்போர் நடந்த வேளையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் வன்னி காட்டுப் பகுதியில் பல நாட்கள் தங்கி இருந்தேன். பிரபாகரன் என்னை இரவு நேரங்களில் சிங்கள கலெக்டர் ஆபீஸில் தூங்க வைத்தார் என்று நம்புவதற்கு கடினமான விஷயங்களை பேசுவதை அவர் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இறந்தவர்கள் யாரும் உயிருடன் வந்து அதை மறுக்கப் போவதில்லை” என்றும் அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

மேடைகளில் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவரால் தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்று எதிர் பார்க்கலாம்.

எனினும், அது தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவையும், திமுகவையும் இந்த தேர்தலில் பாதிக்குமா? என்பது சந்தேகமே!

Views: - 20

0

0