உள்ளதை திரித்துச்‌ சொல்வது வரலாறு ஆகாது… நாகை புகைப்படக் கண்காட்சியில் ஜெ., போட்டோ புறக்கணிப்பு : ஓபிஎஸ் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
21 October 2021, 1:54 pm
OPS - Updatenews360
Quick Share

சென்னை : நாகை மாவட்டம் உருவாகக் காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை, நாகை மாவட்டம்‌ உருவான வரலாற்றை சித்தரிக்கும்‌ புகைப்படக்‌ கண்காட்சியில் புறக்கணித்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசின்‌ நலத்‌ திட்டங்கள்‌ மக்களை எளிதில்‌ சென்றடையும்‌ வகையிலும்‌, அரசு அலுவலகங்களை நாடி மக்கள்‌ நீண்ட தூரம்‌ பயணிப்பதை தடுக்கும்‌ வகையிலும்‌, சீரான நிருவாக அமைப்பிற்கு வழிவகுக்கும்‌ வகையிலும்‌ பெரிய வருவாய்‌ மாவட்டங்களை பிரிப்பதில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ முக்கியத்துவம்‌ அளித்து வந்தது. அந்த வகையில்‌, மாண்புமிகு அம்மா அவர்கள்‌ முதன்‌ முறை தமிழ்நாட்டின்‌ முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்‌ ஒருங்கிணைந்த தஞ்சாவூர்‌ மாவட்டத்தை பிரித்து புதிதாக நாகப்பட்டினம்‌ மாவட்டத்தை 18-10-1991 அன்று உருவாக்கினார்கள்‌.

இதற்கென பிரம்மாண்டமான விழா நாகப்பட்டினத்தில்‌ மாண்புமிகு அம்மா அவர்களால்‌ எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில்‌ பல மாவட்டங்கள்‌ பிரிந்ததற்கு முன்னோடியாக விளங்கும்‌ மாவட்டம்‌ நாகப்பட்டினம்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. இதன்‌ காரணமாக, அந்த மாவட்டம்‌ வளர்ச்சி அடைந்ததோடு, அந்த மாநிலத்திற்கென்று புதிய அலுவலகக்‌ கட்டடங்கள்‌ கட்டப்பட்டு, அரசின்‌ நலத்‌ திட்டங்கள்‌ அம்மாவட்ட மக்களை விரைந்து சென்றடைந்தன.

வரலாறு மற்றும்‌ கலாச்சாரம்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததும்‌, சோழ மண்டலத்தின்‌ ஒர்‌ அங்கமாக விளங்கியதுமான நாகப்பட்டினம்‌ தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள்‌ நிறைவடைந்த நிலையில்‌, மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகம்‌ உட்பட அனைத்து அலுவலகங்களும்‌ வண்ணமிகு மின்‌ விளக்குகளால்‌ அலங்கரிக்கப்பட்டு, நாகப்பட்டினம்‌
மாவட்டம்‌ உருவான வரலாற்றை சித்தரிக்கும்‌ புகைப்படக்‌ கண்காட்சியும்‌ அமைக்கப்பட்டு மாவட்டமே விழாக்‌ கோலம்‌ பூண்டுள்ளதாக செய்தி வந்துள்ளது மிக்க மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்‌.

அதேசமயத்தில்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களால்‌ 18-10-1991 அன்று பிரம்மாண்டமான விழா எடுக்கப்பட்டு நாகப்பட்டினம்‌ மாவட்டத்தை தொடங்கி வைத்தது குறித்த புகைப்படம்‌ ஏதும்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ உருவான வரலாற்றை சித்தரிக்கும்‌ புகைப்படக்‌ கண்காட்சியில்‌ இடம்‌ பெறாதது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியள்ளதாக வந்துள்ள செய்தி மன வேதனையை அளிக்கிறது.

மாற்றாந்‌ தோட்டத்து மல்லிகைக்கும்‌ மணம்‌ உண்டு’ என்ற பேரறிஞர்‌ அண்ணா அவர்களின்‌ வழியில்‌ ஆட்சி நடத்துகிறோம்‌ என்று சொல்லிக்‌ கொள்ளும்‌ தி.மு.க, அண்ணாவின்‌ பொன்மொழிக்கு முற்றிலும்‌ மாறான வகையில்‌ செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக அல்லும்‌ பகலும்‌ அயராது உழைத்து எண்ணற்ற திட்டங்களை தீட்டி, தன்‌ வாழ்நாளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌. இன்னும்‌ சொல்லப்போனால்‌, டெல்டா மாவட்டமக்களின்‌ ஜீவாதாரப்‌ பிரச்சனையான காவேரி நதிநீர்ப்‌ பிரச்சனையில்‌ சட்டப்‌ போராட்டம்‌ நடத்தி, காவேரி நடுவர்‌ மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தவர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌.

இந்தவகையில்‌, மாண்புமிகு அம்மா அவர்களால்‌ உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம்‌ மாவட்ட வரலாற்றை சித்தரிக்கும்‌ புகைப்படக்‌ கண்காட்சியில்‌, அந்த மாவட்டம்‌ உருவாக காரணமாயிருந்த மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ தொடக்க விழாவில்‌ பங்கு கொண்ட புகைப்படம்‌ இடம்‌ பெறாதது வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு சமம்‌. உள்ளதை உள்ளபடி சொல்வதுதான்‌ வரலாறு. இதில்‌ அரசியல்‌ காழ்ப்புணர்ச்சி என்பதற்கு இடமளிக்கக்கூடாது. உள்ளதை திரித்துச்‌ சொல்வது வரலாறுஆகாது.

இந்த விழா ஐந்து நாட்கள்‌ நடைபெறும்‌ என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால்‌, மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ தொடக்க விழாவில்‌ கலந்து கொண்ட புகைப்படத்தினை கண்காட்சியில்‌ இடம்‌ பெறச்‌ செய்ய வேண்டும்‌ என்பதே அப்பகுதிமக்களின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது. அப்பொழுதுதான்‌, இளைய சமுதாயத்தினர்‌ அந்தமாவட்டம்‌ உருவான வரலாறை தெரிந்து கொள்ள முடியும்‌.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌ உருவான வரலாற்றை சித்தரிக்கும்‌ புகைப்படக்‌ கண்காட்சியில்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ இந்த மாவட்ட தொடக்க விழாவில்‌ பங்கு கொண்ட புகைப்பத்தினை இடம்‌ பெறச்‌ செய்து அம்மாவட்ட மக்களின்‌
எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 203

0

0