பாஜக மீது அதிருப்தி உண்மையே..! வெளியேறுகிறேனா.? நயினார் நாகேந்திரன் முக்கிய அறிவிப்பு

3 August 2020, 7:23 pm
Quick Share

சென்னை: அதிருப்தியில் இருந்தாலும் பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக,திமுகவில் இருந்து பலரும் பாஜகவில் ஐக்கியமாகி அதிர்ச்சி தந்தனர். தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று குறிக்கோளுடன் அக்கட்சி தீவிரமாக இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு பலர் தாவினர். அவர்களில் முக்கியமானவர் நயினார் நாகேந்திரன். அதிமுகவில் பல முக்கிய இலாக்காக்களில் அமைச்சராக இருந்து அசத்தியவர். ஜெயலலிதா மறைந்தவுடன் சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியவர், பின்னர் 2017ம் ஆண்டு பாஜகவில் தம்மை இணைத்து கொண்டார்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்கினார். ஆனால் தோல்வி அடைந்தார். இதையடுத்து கட்சிக்குள் பெரிய பதவியை பிடிக்க எண்ணி மாநில தலைவர் பதவிக்கு காய் நகர்த்தினார்.

கடைசி 3 நபர்கள் என்ற டெல்லி பட்டியலில் அவரும் இருந்தார். ஆனால் கடைசி நேர மாயாஜால அரசியலில் எல். முருகன் தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்றினார்.

அன்று முதல் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கடும் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து விலக போகிறார் என்று பேச்சுகள் உலா வரத் தொடங்கின.

இது குறித்து அவர் தமது விளக்கத்தை அளித்துள்ளார். நயினார் நாகேந்திரன் கூறி இருப்பதாவது:  பாஜக தலைமை மீது தமக்கு வருத்தம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது.

நம்பிக்கையோடு பாஜகவில் வந்தவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. ஆகவே இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு நான் கட்சி மாறப்போகிறேன் என்று வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறி உள்ளார்.