6 பேர் விடுதலை விவகாரம்.. தவறான முன்னுதாரணம் ஆகிவிட வேண்டாம் : CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்!

Author: Babu Lakshmanan
12 November 2022, 8:34 am
Annamalai Vs Stalin - Updatenews360
Quick Share

சென்னை : நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான முன்னுதாரணம் ஆகி விட வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- மரியாதைக்குரிய இந்திய உச்சநீதிமன்றம்‌, அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ 142ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி, முன்னாள்‌ பாரதப்‌ பிரதமர் ராஜீவ்‌ காந்தி அவர்கள்‌ கொலையில்‌ தொடர்புடைய குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.

இன்று, உச்சநீதிமன்றம்‌, ஆயுள்‌ தண்டனை விதிக்கப்பட்டிருந்த மற்ற ஆறு குற்றவாளிகளையும்‌, பேரறிவாளன்‌ விடுதலையைக்‌ காரணமாகக்‌ காட்டி, விடுதலை செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி, நமது நாட்டின்‌ சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன்‌, உச்சநீதிமன்றம்‌ தமக்கு வழங்கப்பட்டிருக்கும்‌ சிறப்பு அதிகாரத்தைப்‌ பயன்படுத்த முடிவு செய்திருப்பதைப்‌ புரிந்துகொள்கிறது.

ஆயினும்‌, விடுதலை செய்யப்பட்டிருக்கும்‌ குற்றவாளிகள்‌, நிரபராதிகள்‌ என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம்‌. மரியாதைக்குரிய உச்சநீதிமன்றம்‌ இந்தத்‌ தீர்ப்புகளை வழங்கியதும்‌, காங்கிரஸ்‌ கட்சி காட்டும்‌ பாசாங்குத்தனம்‌ திகைக்க வைக்கிறது.

முன்னாள்‌ பாரதப்‌ பிரதமர்‌ திரு. ராஜீவ்‌ காந்தி கொலைக்‌ குற்றவாளி பேரறிவாளன்‌ விடுதலையானதும்‌, தமிழக முதல்வர்‌ திரு மு.க. ஸ்டாலின்‌ அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார்‌. அதனைக்‌ கண்டிக்க முதுகெலும்பில்லாமல்‌, காங்கிரஸ்‌ கட்சி திமுக கூட்டணியில்‌ தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இன்று, காங்கிரஸ்‌ மூத்த தலைவர்கள்‌, இந்த ஆறு பேர்‌ சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை அரைமனதுடன்‌ கண்டித்தாலும்‌ அவர்களது உண்மையான தலைமையும்‌, அவரது பிள்ளைகளும்‌, கடந்த காலங்களில்‌ கடிதங்கள்‌ வாயிலாகவும்‌, நேரடிச்‌ சந்திப்புகள்‌ வாயிலாகவும்‌, குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாகவும்‌, அவர்களைச்‌ சிறையில்‌ இருந்து விடுவிப்பதில்‌ தங்களுக்கு எந்த ஆட்சேபனையும்‌ இல்லை என்றும்‌ தெரிவித்திருக்கிறார்கள்‌.

காங்கிரஸ்‌ கட்சிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை விட, தமிழ்நாட்டில்‌ தேர்தல்‌ பதிவை முக்கியமாகிவிட்டது. தமிழக முதல்வர்‌ திரு மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ அரசியல்‌ அமைப்பு சட்டம்‌ தனக்கு வழங்கியுள்ள பொறுப்பையும்‌, நமது தேசத்தின்‌ இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடக்‌ கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்‌.

தமிழ்நாட்டை, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு புகலிடம்‌ ஆக்கி விட வேண்டாம்‌ என்றும்‌ தமிழக முதல்வரை பணிவன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 326

0

0