நளினிக்கு சொன்னது அறிவுரையா?… எச்சரிக்கையா…? கடுப்பாகி திடீரென பொங்கிய திமுக ஆதரவாளர்கள்…!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 7:03 pm
Quick Share

கவிஞர் சல்மாவை தமிழக அரசியல் வட்டாரத்தில் அறியாதவர்கள் மிகக் குறைவு. திமுகவில் உள்ள பெண் கவிஞர்களில் இவருக்கு கட்சியில் நல்ல செல்வாக்கும் உண்டு.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு நடப்புகள் குறித்து, அவ்வப்போது கருத்து தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் தீவிரமானதொரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. மாறாக மிக அண்மையில் அவர் வெளியிட்ட ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

வார்னிங்

மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை கைதிகள் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 6 பேர் விடுதலை தொடர்பான விஷயம் என்பதால் இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கவிஞர் சல்மா தனது ட்விட்டர் பதிவில் நளினி பற்றி ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.
அதில், “நளினி திரும்ப திரும்ப மீடியாவை சந்தித்து உரையாடுவது சரியா? எனத் தெரியவில்லை. அமைதிதான் இப்போதைக்கு சாலச்சிறந்தது”என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் சல்மா, எதற்காக இப்படியொரு கருத்தை பதிவிட்டார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதற்கு சிறையில் இருந்து விடுதலையான நளினி, இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு தான் உள்ளிட்ட 6 பேர் விடுதலை தொடர்பாக அளித்த பேட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இபிஎஸ்-க்கு நன்றி

அப்போது நளினி சொன்னது இது தான்:- தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. இந்த வழக்கை நடத்துவதற்கு உதவியாக இருந்த தமிழக மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பது தொடர்பாக இனிமேல்தான் அனுமதி கேட்க வேண்டும். ஆனால் பேரறிவாளன் அவரை சந்தித்தபோது நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுபோல் ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது. யாரும் என்னை வைத்து அவரை சிக்கலில் சிக்க வைக்க கூடாது. அந்த ஒரு பயம் இருக்கிறது. இதில் பேரறிவாளனிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அதனால்தான் தயங்குகிறேன்.

Nalini - Updatenews360

ஜெயலலிதா முயற்சி மற்றும் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கையால்தான் நான் இப்போது வெளியே வந்து உள்ளேன். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்த வேண்டும். ஜெயலலிதாவின் சமாதிக்கு போகவேண்டும். கலாம் ஐயாவின் சமாதியைப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது. அகதிகள் முகாமிலிருந்து என் கணவரை விடுவிக்கவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். எமர்ஜென்ஸி விசா கிடைத்தால் லண்டனில் உள்ள என் மகளைப் பார்க்க வாய்ப்புள்ளது” என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

திமுகவுக்கு கோபம்

“நளினியின் இந்த பேட்டி தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திமுகவினருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சி பற்றி தனிப்பட்ட முறையில் நளினி எதுவும் சொல்லவில்லை. குறிப்பாக
2000-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தான் அவருடைய அமைச்சரவை நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அப்போது சோனியா காந்தியும், குடியரசுத் தலைவரிடம் இதேபோல் கேட்டுக் கொண்டார். இதனால்தான், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்று பழைய நினைவுகளை திமுகவினர் கூறுகின்றனர்.

அப்படி இருந்தும், கருணாநிதி பற்றியோ, திமுக எடுத்த முயற்சி குறித்தோ நளினி எதுவும் கூறாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாராட்டி இருக்கிறாரே என்ற கோபத்தில் கவிஞர் சல்மா இப்படி பதிவிட்டிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

DMK Announcement - Updatenews360

அதேநேரம்தான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தால் அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நளினி கூறியது திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் பேரறிவாளனின் விடுதலைக்குப் பின்பு அவரை ஸ்டாலின் நேரில் அழைத்து, ஆரத்தழுவி தேநீர் விருந்து அளித்தது காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. 6 மாதங்களுக்கு முன்பு நடந்த அந்த நிகழ்வை நளினி ஏன் இப்போது நினைவுபடுத்துகிறார் என்ற எரிச்சலும் திமுகவுக்கு வந்திருக்கலாம்.

அதேநேரம் ஜெயலலிதா 2011ல் முதலமைச்சராக பதவி வகித்தபோது, ராஜீவ் கொலை கைதிகளில் மற்றவர்களுக்கும் கருணையின் அடிப்படையில் தண்டனை குறைப்பு செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.

மேலும் 2014 பிப்ரவரி 18-ந் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இப்படி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே 7 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம்தேதி இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆளுநருக்கு மீண்டும் பரிந்துரை செய்தது.

இதையெல்லாம் மனதில் வைத்துதான் ஜெயலலிதாவையும், எடப்பாடி பழனிசாமியையும் நளினி பாராட்டி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

நளினியின் கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் இவர்கள் தற்போது திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு, செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்யும்போது இப் பிரச்சனையும் கூட முடிவுக்கு வந்துவிடும்.

இந்த நிலையில்தான் திருச்சி சிறப்பு முகாமில் தனது கணவர் முருகனை சந்தித்த பிறகு நளினி கூறுகையில், முதலமைச்சரை நேரில் சென்று சந்திக்கவேண்டும் என்று கிடையாது. அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார். எங்களை வெளிநாடு அனுப்புவதற்காக பணிகளை அரசு சார்பில் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக நினைக்கிறேன், என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.

எனவே, ஊடகங்களிடம் அதிகம் பேசக்கூடாது என்று நளினிக்கு திமுக மகளிரணியை சேர்ந்த சல்மா கூறியிருப்பதை அறிவுரையாக கூறியிருக்கிறாரா?… அல்லது எச்சரிக்கையாக விடுத்திருக்கிறாரா? என்பதை புரிந்து கொள்வது சற்று கடினமாகதான் இருக்கிறது.

ஆனால் ஊடகங்கள் கருத்து கேட்கும்போது அதை நளினியால் தவிர்ப்பதும் கடினம். அதை செய்தி சேனல்கள் பரபரப்பாக வெளியிடுவதையும் தடுக்க முடியாது. இது சல்மா போன்றவர்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான். அதேநேரம், சல்மா எதற்காக இப்படி சொன்னார் என்பது நளினிக்கு நன்றாகவே புரிந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 118

0

0