தேசிய கொடி அவமதிப்பு வழக்கு : முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் மனு..!

22 August 2020, 2:48 pm
SV Sekar updatenews360
Quick Share

சென்னை : தேசிய கொடியை அவமதித்ததாக பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்துக்கடவுளான முருகனை ஆபாசமாக சித்தரித்தது, மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது உள்ளிட்ட விவகாரங்களை பற்றி பேசி பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், “காவி ஆடையை அணிந்தால் காவி கலங்கும் என்கிறார் முதலமைச்சர். அப்போது, தேசிய கொடி நமக்கு கலங்கமா..? வரும் ஆக.,15ம் தேதி தேசிய கொடியில் காவியை அகற்றி விட்டு, கொடியை ஏற்றப்போகிறாரா முதலமைச்சர். தேசிய கொடியில் காவியை அகற்றி விட்டு, வெள்ளை, பச்சை, அதாவது கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மட்டும் போதும், இந்துக்கள் வேண்டாம் என்னும் முடிவுக்கு வந்து இருக்கிறீர்களா..?,” எனப் பேசியிருந்தார்.

தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக அவரது இந்தப் பேச்சு இருப்பதாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், உள்நோக்கத்துடனும், மத துவேஷத்தை தூண்டும் விதமாக எஸ்.வி. சேகர் பேசியிருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் துறையினரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார், தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசி, தேசிய கொடியை அவமதித்ததாக எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Views: - 34

0

0