பொங்கல் பரிசுத்தொகுப்பு வெல்லத்தில் ஊசி சிரஞ்ச்: ஆதாரத்துடன் உணவு பாதுகாப்பு துறையில் புகார்…குமரியில் ஷாக்..!!

Author: Aarthi Sivakumar
15 January 2022, 6:02 pm
Quick Share

குமரி: தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வெல்லத்தில் சிரஞ்ச் ஊசி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கியது.

இந்த பொருட்களை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்த தருணத்தில் ஒரு சில இடங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்ற முறையில் இருந்ததாக புகார் எழுந்தது.

அந்த வகையில் குமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியை சேர்ந்த ஜெயகுமாரி என்பவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன் ரேசன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி உள்ளார்.

அதில் அவருக்கு 21 பொருட்களுக்கு பதிலாக 17 பொருட்கள் மட்டும் கடை ஊழியர் வழங்கி உள்ளதாக தெரிகிறது. கிடைத்த பொருட்களை வீட்டிற்கு வாங்கி வந்த ஜெயகுமாரி பொருட்களை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்.

தொடர்ந்து இன்று காலை பொங்கல் வைப்பதற்காக தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து வீட்டு வாசலில் புதுப்பானையை வைத்து பொங்கல் வைத்துள்ளார். அப்போது பொங்கலில் போடுவதற்காக ரேசன் கடையில் கொடுத்த வெல்லத்தை எடுத்து பொடி செய்ய முயன்றுள்ளார்.

அப்போது வெட்டுகத்தியால் வெல்லத்தை இரண்டாக பிளந்தபோது அதனுள் பெரிய அளவிலான மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஊசி சிரஞ்ச் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரி தனது மகள்களிடம் தெரிவித்து உள்ளார் .

இதுகுறித்து, தகவல் தெரிவிக்க ஊராட்சி தலைவரை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் அதனை உறுதிசெய்ய நேரடியாக ஜெயகுமாரியின் வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளார். அப்போது அங்கு ஊசி சிரஞ்சுடன் இருந்த வெல்லத்தை கண்டு உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் வட்டவழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்வையிடாமல் மெத்தன போக்கை கையாண்டு வருவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

Views: - 164

0

0