நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதிக்கவும் : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு..!

15 September 2020, 5:36 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

டெல்லி : கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வை எழுத அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்தியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றமும், மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியது.

இந்த நிலையில், மொத்தம் 15.97 லட்சம் மாணவ – மாணவிகள் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆனால், 14.37 லட்சம் மாணவ – மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதினர். இதேபோல, ஜேஇஇ தேர்வையும் பலர் எழுதவில்லை.

இவர்கள் தேர்வு எழுதாததற்கு கொரோனா அச்சம் மற்றும் போக்குவரத்து வசதியில்லாததல், தேர்வு மையத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று சேர முடியாத நிலை உள்ளிட்டவை காரணங்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு தேர்வுகளையும் எழுத முடியாத மாணவ – மாணவிகளுக்கு மறு தேர்வை நடத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.