நீட் விலக்கு விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு காட்டிய அதிரடி.. திகைத்துப் போன திமுக…!!

Author: Babu Lakshmanan
12 February 2022, 7:27 pm
Quick Share

நீட் தேர்வுக்கு 2017-ம் ஆண்டு முதல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுவும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொள்ள நீட் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

நீட்தேர்வும்… திமுகவும்…

2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது.

இதன் வீரியத்தை உணர்ந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, தான் பிரச்சாரம் மேற்கொண்ட அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதாகத்தான் இருக்கும். அந்த ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என ‘சீரியஸ்’ வாக்குறுதியும் அளித்தார்.

இதற்கிடையே, 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான
அதிமுக அரசு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றி அதற்கு அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்புதலும் பெற்றது. இதனால் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 436 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் இந்த ஆண்டு 541 பேருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிராகரிப்பு

இதுபோன்ற சூழலில்தான், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே மாதம் 18-ம் தேதி தமிழக ஆளுநராக ஐபிஎஸ் அதிகாரி ஆர். என்.ரவி நியமிக்கப்பட்டார்.

Neet CM And Governor- Updatenews360

ஆனால் கடந்த 1-ம் தேதி, அந்த சட்ட மசோதா சமூக நீதிக்கு எதிராக உள்ளது, அதனுடன் நீட் தேர்வு தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் பெருத்த குறைபாடுகளுடன் உள்ளது என்று கூறி அதை மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இதனால் திமுக அரசு கடும் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்தது.

ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய இந்த மசோதாவை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றினார். இந்த சட்ட மசோதாவை மறுபடியும் ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பிவைத்துள்ள நிலையில், இந்த முறை அவர் கால தாமதம் செய்யமாட்டார். குடியரசு தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஆளும் திமுக தலைமைக்கு நிறையவே இருக்கிறது.

வாய்ப்பே இல்லை

ஆனால், நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்பு இப்போதைக்கு நிறைவேறப் போவதில்லை என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம் தமிழக அரசுக்கு ஆளுநர் செக் வைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால் அதே மசோதாவை பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக அனுப்பும்போது அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது.

ஆனால், ஒப்புதல் தர கால நிர்ணயம் எதுவும் சட்டத்தில் சொல்லப்படாததால் அதை வைத்தே மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டு விடலாம். இந்த விவகாரத்தில், மத்திய அரசு அறிவுறுத்தினால் மசோதாவை குடியரசு தலைவருக்கு தமிழக ஆளுநர் உடனடியாக அனுப்பி வைக்க வாய்ப்பும் உள்ளது.

President_Ramnath_Govind_UpdateNews360

அப்படியொரு உத்தரவு வந்து மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்போது இந்த சட்ட மசோதாவை அவரும் கிடப்பில் போட முடியும். இங்கே ஆளுநரை சர்ச்சைகளிலிருந்து விடுவிக்கும் வகையில், இந்த அறிவுறுத்தல்கள் ஆளுநர் ரவிக்கு டெல்லியில் இருந்து உத்தரவாக வரலாம்.

அதாவது, இங்கு ஆளுநரிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தாலும் கூட மேலே ரெட் சிக்னல் காட்ட வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படை. அதனால், ஆளுநரிடமிருக்கும் இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு, அவர் மூலமாக அந்த மசோதாவை கிடப்பில் போட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக டெல்லி மேலிட பாஜக தரப்பில் ஊடகங்களில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்ட நிலையில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருவதும்,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரு தினங்களுக்கு முன்பு பேசும்போது ஆளுநர் ரவியை கடுமையாக போட்டுத் தாக்கியதும்தான் என்கிறார்கள்.

துரைமுருகன் வார்னிங்

துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீண்டும் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல திரும்பவும் ஆளுநருக்கே நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை அனுப்பி வைத்து இருக்கிறோம். அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று ஆளுநர் இருந்துவிடலாம். இல்லையென்றால் தினமும் அவரை திட்டிக்கொண்டேதான் இருப்போம்” என்று கொந்தளித்து இருந்தார்.

ஆளுநர் ரவி, பதவி விலகும் வகையில் இப்படி நடத்தப்படுவார் என்ற மிரட்டல் இதில் இருப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத் தலைவர்களுக்கு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது டெல்லியில் திமுக எம்பிக்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதனால் தனிப்பட்ட முறையில் டெல்லியில் சில முயற்சிகளை திமுக எடுத்து வருகிறது என்கிறார்கள். ஏனென்றால் நீட் விலக்கு விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலினின் இமேஜ் சம்மந்தப்பட்டதாகவும் இருப்பதுதான்.

இன்னொரு பக்கம் சட்ட போராட்டங்களை நடத்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீட் தொடர்பாக ஏற்கனவே சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருப்பதால், சட்ட போராட்டத்திற்கும் திமுக தயாராகவே இருப்பதாக தமிழக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்போராட்டம்

இதுபற்றி டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது,” தமிழக ஆளுநர் ரவி, இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தாலும் கூட அதை அவர் கிடப்பில் போடுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவருடைய பதவிகாலம் இன்னும் 5 மாதங்களில் முடிந்துவிடும்.

அதனால் புதிய குடியரசுத் தலைவர் இதில் முடிவு எடுத்துக் கொள்ளட்டும் என்று தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைக்க இடமுண்டு.

மத்திய அரசும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க தீவிரமாக இறங்கி விடும். அதனால் குடியரசு தலைவர் இதில் ரிஸ்க் எடுக்க மாட்டார் என்று கருத வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஏற்கனவே 2017-ம் ஆண்டு இதே சட்ட மசோதாவை குடியரசு தலைவர் மாளிகை நிராகரித்து அனுப்பியதும் அவருக்கு நினைவிலிருக்கும்.

மேலும் இதில் மத்திய பாஜக அரசின் கருத்தை அறிந்துதான் அவர் செயல்படுவார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். நீட் தேர்வு செல்லும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பளித்துள்ளதால் அதை மனதில் வைத்தும் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கலாம்.

எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக அரசு தொடர்ந்து பல ஆண்டுகள் சட்டப் போராட்டத்தை நடத்தும் சூழல் ஏற்படலாம்.

தற்போதைக்கு ஆளுநர் ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளாது என்பதுதான் எதார்த்த நிலை. ஏனென்றால் பிரிவினைவாத கோஷங்கள், தீவிரவாத இயக்கங்கள் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி வருவதாக உளவுத் துறை மத்திய அரசுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த சிலருக்கும் அதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஏற்கனவே ஆளுநர் ரவி மத்திய உளவுத்துறை உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதால் இதுபோன்ற சூழ்நிலையில் அவர் தமிழகத்தில் இருப்பதுதான் நல்லது என்று மத்திய அரசு நினைக்கும். எனவே ஆளுநர் ரவி தமிழகத்திலிருந்து எதற்காகவும் திரும்பப் பெறப்பட மாட்டார்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 555

1

0