நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய குழு : மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

5 July 2021, 1:57 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழு நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுசெயலாளர் கரு.நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யுகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மாணவர்கள், திமுக, மதிமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாஜக அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கை தொடுத்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதனிடையே, இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசு ஜுலை 8ம் தேதிக்கு பதில் அளிக்க உத்தரவிட்டதோடு, மாணவர்கள், அரசியல் கட்சியினரிடம் தனித்தனியே வாதங்கள் பெற வேண்டியிருப்பதால், வழக்கு விசாரணையை ஜுலை 13ம் தேதிக்கு மதியத்திற்கு ஒத்திவைத்தனர்.

Views: - 122

0

0