நீட் ரத்துக்கு ஆதரவு கொடுங்க… ஸ்டாலின் கடிதம் பலன் தருமா..?தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
5 October 2021, 2:21 pm
Neet - dmk - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாணவர் சமுதாயத்துக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் திமுக கொடுத்த ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வாக்குறுதி, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதுதான்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்படும் என்றும் அந்த வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீட் தேர்வு ரத்து எங்கே?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இன்னும் ஒருபடி மேலே போய், ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் மானம் சூடு சொரணை, மாணவர்களின் மீது அக்கறை இருந்திருந்தால், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் செய்யவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும். அந்த ஆளுமை எங்கள் தலைவருக்கு மட்டுமே உண்டு. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று மாணவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார். இதுதொடர்பாக டிவி சேனல்களுக்கு பேட்டிகளும் அளித்தார்.

Udhayanithi stalin - Updatenews3

2017-ம் ஆண்டு முதலே, நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததால் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி கண்டது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. மாறாக நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு நியமித்தது.

மாணவர்கள் தற்கொலை

அதேநேரம் செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து, அதை தமிழகத்தில் தேசிய தேர்வு முகமை சுமுகமாக நடத்தி முடித்தும் விட்டது.

இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதுவதற்கு முன்பு தமிழகத்தில் தனுஷ் என்ற மாணவனும், தேர்வை எழுதி முடித்த பின்பு கனிமொழி, சௌந்தர்யா என்கிற 2 மாணவிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Neet Exam Suicide -Updatenews360

இந்தநிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி, அதாவது நீட் தேர்வு நடந்து முடிந்த மறுநாள் நிறைவேற்றி அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதில் ஜனாதிபதி தமிழ் அரசுக்கு சாதகமான முடிவை எடுப்பார் என்று திமுக தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

புள்ளி விபரங்கள் இல்லா ஏகே ராஜன் அறிக்கை

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 20-ம் தேதி ராஜன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், “நீட் தேர்வு தொடர்ந்தால் கிராமப்புற ஏழை மாணவர்களால் மருத்துவ படிப்பில் சேர முடியாது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதேநேரம் தமிழக அரசு அமைத்த குழு 2010-க்கு முன்பு நீட் தேர்வு இல்லாத காலங்களில் அரசு பள்ளிகளில் படித்த கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் எத்தனை இடங்கள் கிடைத்தது என்பதை குறிப்பிடவில்லை என்றும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 10 ஆண்டுகளில் கூட பல இடங்களில் சரியான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்படாமல் அந்த இடம் காலியாக விடப்பட்டு இருப்பதையும் கல்வியாளர்கள் சுட்டி காண்பிக்கின்றனர்.

ak rajan - neet - updatenews360

இந்தக் குழு நீட் தேர்வின் தாக்கம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யவில்லை, திமுக அரசின் நிலைப்பாட்டை அப்படியே வலியுறுத்துவது போல உள்ளது, என்பது சில கல்வியாளர்களின் வாதம்.

12 மாநிலங்களுக்கு கடிதம்

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஷ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கோவா என 12 மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதனுடன் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையும் ஸ்டாலின் இணைத்துள்ளார்.

அதில், “நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளால் நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வரும் மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அரசியலமைப்பு அதிகார சமநிலை மீறப்படுகிறது என்பதே எங்களது நிலைப்பாடு.

cm stalin - updatenews360

கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதில் சிரமத்துக்கு உள்ளாவதைத் தடுக்கவும், அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தங்களது ஆதரவைத் தெரிவிக்கவேண்டுகிறேன்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க மாநில முதலமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியிலும் அரசியல்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பிற மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுவது இது 3-வது முறையாகும். கடந்த ஜூன் மாதம் சிறு துறைமுகங்களின் கட்டுப்பாட்டை மத்திய அரசு எடுத்துக்கொண்டது மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தினர் மற்றும் சிறு கடனாளர்கள் கடன்களைத் திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்தக்கோரி அவர் கடிதங்களை எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு சாதகமாக எத்தனை முதலமைச்சர்கள் பதில் கடிதம் எழுதினார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வரவில்லை.

இதுகுறித்து கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கும் கருத்துகள் சிந்திக்க வைப்பதாக உள்ளன.

NEET -Updatenews360

அவர்கள் கூறும்போது, “நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சிகளோ, மாணவர்களோ போராடியது இல்லை.

மற்ற எல்லா மாநிலங்களிலும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் நவோதயா உண்டு உறைவிடப் பள்ளிகள் சுமார் 600 உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை. இவற்றின் தரம் சிபிஎஸ்இ பள்ளிகளை விட மேம்பட்டதாக இருக்கிறது. இங்கு பயிலும் மாணவர்களில் 83 சதவீதம் பேர் நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடமும் கிடைக்கிறது.
இந்தப் பள்ளிகளில் இந்தி படிக்க வேண்டியது கட்டாயம் என்பதால் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக இந்த கல்வி நிலையங்கள் வராமல் தடுக்கப்பட்டு விட்டது.

முதலமைச்சர் இணைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழு தமிழக அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை பிற மாநிலங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. தவிர, அதில் நிரப்பாமல் விடப்பட்ட புள்ளி விவரங்களைப் பார்த்தால் அந்த அறிக்கையின் மீதான நம்பகத்தன்மை அவர்களுக்கு குறைந்துவிடும். தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள கூட்டாட்சித் தத்துவம் என்ற கருத்தில் வேண்டுமானால் பிற மாநில முதலமைச்சர்கள் உடன்படலாம். எனினும் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தபோது பல மாநிலங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி அவப்பெயரை சம்பாதித்துக்கொண்டன. கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டன.

அதனால் அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஸ்டாலினின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஒருவேளை 2024 தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் புதிய அரசு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் கல்வி பொதுப் பட்டியலில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு.
ஏனென்றால் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை 1975-ம் ஆண்டு மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்றவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இதனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.

வாக்குறுதியால் ஏமாற்றம்

2017-ல் நீட் தேர்வுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி, இதுதான் இறுதி தீர்ப்பு. இதை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாது. மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்துவதுதான் சிறந்த வழி என்று கூறியிருந்தார்.

மேலும் நீட் தேர்வு இல்லாத 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது. ஆனால் கிராமப்புற ஏழை மாணவர்கள் வெறும் 260 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. நீட் தேர்வு இல்லாவிட்டால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று கூறுவது தவறான வாதம் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Stalin Madurai -Updatenews360

நீட் தேர்வில் முறைகேடு நடக்கிறது, எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்று கூறி யாராவது பொது நல வழக்கு தொடர்ந்தால் அந்த மனுக்கள் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தற்போது சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் கூறுகிறார்.
அப்படியென்றால் அடுத்த ஆண்டும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும். அதை எங்களால் தடுக்க முடியாது என்பதை அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என்று அர்த்தமாகிறது.

தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறி ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்று விட்டு இப்போது மாணவர்களை தூண்டிவிடும் விதமாக பேசுவது சரியான செயல் அல்ல. வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டது அவர்கள்தான். எனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் அவர்களுக்குத்தான் உள்ளது. மாணவர்களுக்கு அல்ல” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 488

0

0