நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை : நாளை நீட் தேர்வு… இன்று ஒரே நாளில் இருவர் தற்கொலை!!

12 September 2020, 7:40 pm
suicide shadow - updatenews360
Quick Share

தருமபுரி : நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாளை நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை, 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தனது மருத்துவ கனவை நிறைவேற்ற முடியுமா..? என்ற அச்சம் பெரும்பாலான தமிழக மாணவர்களிடையே நிலவி வருகிறது.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த அரியலூர் மாணவன் விக்னேஷ் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீட் தேர்வை கண்டு அச்சப்பட வேண்டாம், தற்கொலை தீர்வாகாது என அரசியல் தலைவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வழங்கி வந்தனர்.

இதனிடையே, நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று அவரே ஆடியோ ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.

இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தின் சோகம் அடங்குவதற்குள், தருமபுரியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் செந்தில் நகரைச் சேர்ந்த ஆதித்யா (20) என்னும் மாணவன், நாளை நடக்கும் நீட் தேர்வுக்காக ஆயத்தமாகி இருந்தார். ஏற்கனவே, நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், மீண்டும் வெற்றி பெறுவோமா..? என்ற அச்சத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு பேர் என இந்த ஒரு வாரத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0