நீட் தேர்வு அச்சம்… மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி ; தமிழகத்தில் தொடரும் சோகம்..!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 1:25 pm
Quick Share

திருவள்ளூர் : நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று எழுதியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய ஆளும் திமுக அரசு கூட, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2வது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்து விட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முயற்சிகளை திமுக அரசு ஒருபுறம் எடுத்து வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு தோல்வி பயத்தால் இந்த ஒரு மாதத்தில் மட்டும், தனுஷ் மற்றும் முரளி கிருஷ்ணா மற்றும் அரியலூர் மாணவி நிஷாந்தி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைக்குமோ என்ற அச்சத்தில், மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில், பிளஸ் 2 பயின்ற மாணவி ஒருவர் நீட் தேர்வு எழுதிய நிலையில், மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில், வீட்டில் இருந்த வார்னிசை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 427

0

0