அரசின் ஆய்வுக் குழு அறிக்கை தாமதம்…? நீண்டு கொண்டே போகும் ‘நீட்’ விவகாரம் : காங்கிரசுக்கு, அதிமுக வைத்த கொட்டு…!

Author: Babu Lakshmanan
29 June 2021, 10:03 pm
Quick Share

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

நீட் தேர்வு : ஆய்வுக் குழு

தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதற்கு இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நீட் தேர்வின் தாக்கம் குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக் கேட்டு பெறும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வுக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இக்குழுவினர் பொதுமக்களிடமும் கருத்து கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “ஒருவேளை நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் மாணவர்கள் அதனை எதிர்கொள்ளும் விதமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தேர்வு இருக்கா… இல்லையா…?

இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்திய தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்து இருக்கிறது. எனவே நடப்பு ஆண்டில் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

cm - eps - updatenews360

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள ஏ. கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்?” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

100% நீட்தேர்வு இருக்காது

இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் கூறும்போது, “கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத் தேர்வு குறித்த தாக்கத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த தீர்மானம், ஜனாதிபதி அல்லது சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும்.
ஒருவேளை தேர்வு நடத்தும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராக வேண்டும். அரசு அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் 100% நீட்தேர்வு இருக்காது” என்று குறிப்பிட்டார்.

Minister Subramaniam- Updatenews360

“அமைச்சர் இப்படி கூறுவது, நீட் தேர்வு இந்தாண்டு நடக்க வாய்ப்புள்ளது, என்பதைப்போல இருக்கிறது. ஏனென்றால் நீட் தேர்வு இந்த ஆண்டு ரத்தாகிவிடும் என அவர் முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் கூறியதுபோல் தெரியவில்லை” என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கருதுகின்றனர்.

அதேநேரம், அவர்களது கவலையையும், குழப்பத்தையும் அதிகரிக்கும் விதமாக அண்மையில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

அதாவது, நீட் தேர்வின் தாக்கம் பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசு ராஜன் தலைமையிலான குழு, தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பது, தாமதமாகலாம் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஏ.கே.ராஜன் கூறும்போது, “நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் நிறைய வந்துள்ளன. பலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்தையும் நன்றாக ஆய்வு செய்த பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஒருமாதத்திற்குள் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஆய்வு முடியாவிட்டால் அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது” என்று கூறினார். 

இதுபற்றி மாணவர்கள் கூறும்போது, “நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்த பின்பு தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே நீட் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி விடும்போல் இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது” என்று வேதனையோடு குறிப்பிட்டனர்.

காங்.,க்கு பதிலடி கொடுத்த அதிமுக

இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, திடீர் ஞானோதயம் பெற்றவராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுகவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

Nellai KS Alagiri Byte - updatenews360

அவர் விடுத்த அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். திரும்பத் திரும்பப் இப் பிரச்சனையை திசை திருப்புவதற்காக காங்கிரஸ் மீது பழிபோட அ.தி.மு.க. முயற்சிக்கிறது.
அதிமுக அரசு கடந்தாண்டு கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்கிறார். அப்படியென்றால் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 3000 இடங்கள் யாருக்கு போனது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காங்கிரசும், திமுகவும்தான் பொறுப்பு

இது தொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “2013-ம் ஆண்டு நீட் தேர்வை மத்தியில் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது. அதில் திமுகவும் அங்கம் வகித்தது. அப்போது தமிழக காங்கிரசும், திமுகவும் இதை எதிர்க்கவில்லை.

இது தொடர்பான வழக்கு 2017-ல் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் வாதிட்டு, வெற்றி பெற்று கொடுத்தவர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி ஆவார். அவர் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதிட்டபோது அதை திமுக, காங்கிரஸ் சார்பில் யாரும் எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை.

“இனி நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை எல்லாம் நீட் தேர்வுவின் அடிப்படையில் நடைபெற இந்த தீர்ப்பு வழி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை. இனி எந்த மாநிலமும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என்று தீர்ப்பின் விவரத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு வெளியே சொன்னவரும் நளினிதான்.

அவருக்கு, அவருடைய வக்கீல் தொழில் செய்வதுதான் பிரதானம், அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றால், பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக அவர் கோர்ட்டில் வாதாடுவாரா?…

நளினியிடம் யாருமே இந்த கேள்வியை கேட்கவில்லை. தவிர ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கூறி இந்த விவகாரத்தில் நளினியை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை.

அப்போது நீட் தொடர்பான வழக்கில் அதிமுக அரசு வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக திமுகவும், காங்கிரசும் இதில் அரசியல் செய்தன. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடந்ததால் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காங்கிரசும், திமுகவும்தான் பொறுப்பு.

அதிமுக அரசு கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர
7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அதை புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டதால் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைத்திருக்கிறது. இதுதவிர பொதுபட்டியலிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூக மாணவர்கள் ஏராளமானோருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்திருக்கிறது. ஒரே அரசுப் பள்ளியில் படித்த 5 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது

நீட் தேர்வு இல்லாத ஆண்டுகளில் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண்கள் முறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மொத்தமே 30 பேருக்கும் குறைவுதான்.

அப்படியென்றால், இதற்கு முன்பு சுமார் 30 ஆயிரம் இடங்கள் லட்ச லட்சமாக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குத்தானே போய் சேர்ந்திருக்கிறது?… ஏழை மாணவர்கள் யாருக்காவது மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இடம் கிடைத்ததா என்ன ?…

NEET- Updatenews360

நீட்தேர்வு இல்லாததால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர 50 லட்சம், 1 கோடி ரூபாய் என்று பணத்தைக் கொட்டிக் கொடுத்து மாணவர்கள் சேர்ந்த அவலமும் நடந்ததே? இதைத் தடுப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதற்கும் அழகிரி
பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

இந்தாண்டும் நீட் தேர்வு நடக்கத்தான் போகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டை விட இந்த வருடம் இன்னும் அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதும் நிச்சயம்.

நாங்கள் அளித்த சிறப்பான நீட் தேர்வு பயிற்சியின் காரணமாகத்தான் அரசு பள்ளி மாணவர்கள் இவ்வளவு பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தது என்று திமுக பெருமையுடன் கூறப் போவதையும் அழகிரி பார்க்கத்தான் போகிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டம் அவருக்கு நினைவுக்கு வந்தால் சரி!” என்று ஆவேசமாக கூறினர்.

Views: - 334

1

0