பெண் காவலரின் கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம்… என்ன சொல்லப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… டிடிவி தினகரன் நறுக்..!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 4:40 pm
Quick Share

சென்னை : நெல்லையில் பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு, உள்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்..? என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை – சுத்தமல்லியை அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவையொட்டி, பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா உள்ளிட்ட காவலர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்களை வரவேற்று பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற காவல் துறையினர் முயன்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் உடனிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த காவலர் மார்கரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உண்மையாக்கி வருவதாகக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என வினவியுள்ளார்.

ஏற்கனவே, காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பெண் காவலரை ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், அடுத்தடுத்து தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Views: - 664

0

0