வேட்பாளர்களை டெபாஷிட் இழக்கச் செய்த 90 வயது மூதாட்டி… ஊராட்சிமன்ற தலைவராகி அற்புதம் : தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய கிராம மக்கள்..!!!
Author: Babu Lakshmanan13 October 2021, 11:08 am
திருநெல்வேலி : பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக 90வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி, இன்று நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும், அதிக இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ததோடு, 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி வெற்றி சான்றிதழை நேரில் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வந்து பெற்றுக் கொண்டார். அப்போது, அவரை அக்கட்சியினர் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
அந்த சமயம், தனக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90 வயது மூதாட்டியை வெற்றி பெறச் செய்த சிவந்திப்பட்டியின் கிராமத்தின் பக்கம் தமிழகத்தின் பார்வை திரும்பியுள்ளது.
0
0