கமல் தலைமையில் புதிய கூட்டணி : மதிமுக விசிக திடீர் முடிவு!!
17 January 2021, 3:01 pmதற்போது வரை திமுக கூட்டணியில் இருப்பதாக மதிமுகவும், விசிகவும் கூறிக்கொண்டாலும் அந்த கட்சிகள் தேர்தல் வரை
அந்த அணியில் இடம் பெறுமா? என்பது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வியாக மாறி வருகிறது.
இதற்கு பிரதான காரணம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
குறைந்தபட்சம் 12 தொகுதிகளாக வேண்டும், தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பது திமுகவிடம் இரு கட்சிகளும் வைக்கும் முக்கிய நிபந்தனைகளாக உள்ளன .
ஆனால் இவர்கள் கேட்கும் அளவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இத்தனை தொகுதிகளை ஒதுக்குவாரா? என்பது சந்தேகம்தான்.
இப்படி தொடர்ந்து வைகோவும், திருமாவளவனும் திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது எதனால் என்பது அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்த விஷயம்.
இந்த இரு கட்சிகளும் சொந்த சின்னத்தில் போட்டியிட ஆசைப் படுவதற்கு சில பின்னணிக் காரணங்கள் உண்டு. மதிமுக கடந்த காலங்களில் எல்லாத் தேர்தல்களிலும் தனது சின்னமான பம்பரத்தில் போட்டியிட்டது.
இந்த முறை அந்தக் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படுமா? என்பது கேள்விக்குறிதான். இதனால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துதான் பம்பரம் சின்னத்தை பெற முடியும் என்கிற சூழல் மதிமுகவுக்கு உள்ளது.
மேலும் கட்சியின் செல்வாக்கும் 2 சதவீதத்துக்கும் கீழே போய்விட்ட நிலையில் அதை மூன்று சதவீதமாக உயர்த்துவதற்கு வைகோ மிகவும் ஆசைப்படுகிறார்.
இல்லாவிட்டால் கட்சியின் நிலைமை எதிர்காலத்தில் அதோ கதியாகிவிடும் என்ற பயமும் அவருக்கு வருகிறது.
ஏற்கனவே, 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுக சின்னமான உதயசூரியனில் நின்றுதான் வெற்றி பெற்றார். இப்போதும் அதேபோல் போட்டியிட்டால் அது கட்சிக்கு பாதகத்தை உருவாக்கும் என்பதை வைகோ நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
இதேபோன்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில்தான் திருமாவளவனின் விசிகவும் உள்ளது. விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் சிதம்பரம் தொகுதியில் மட்டுமே திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் இழுபறியில்தான் வென்றார். தற்போது அவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டு தனது கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற நினைக்கிறார்.
மதிமுகவின் கணேசமூர்த்தியும், விசிகவின் ரவிக்குமாரும் தற்போது நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகவே இடம் பெற்றிருக்கிறார்கள். இதுபோன்ற நிலைமை தமிழக சட்டப்பேரவையிலும் உருவாகி விடக்கூடாது என்று வைகோவும், திருமாவளவனும், நினைக்கிறார்கள்.
இதனால்தான் திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட இவர்கள் இருவரும் இணைந்த கரங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இப்படி இருவரும் ஒரே மனநிலையில் இருப்பதால்தான் ஒரே திசையில் பயணிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.
ஆனால் இந்தக் கட்சிகள் இரண்டும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் அந்த தொகுதிகளை அதிமுக எளிதில் கபளீகரம் செய்துவிடும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.
இதனால்தான் அவர் தனி சின்னத்தில் இந்த கட்சிகள் போட்டியிடுவதை துளியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிகவுக்கும் இடையே ஒரு சுமுகமான சூழல் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
தொகுதி பங்கீடு நடக்கும்போது இது கசப்பான மோதலாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது பாமகவை, திமுக கூட்டணிக்குள் கொண்டுவர விரும்பும் ஸ்டாலின் இவர்களை கண்டுகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.
இப்படி ஒரு எதிர்பாராத நிலைமை உருவானால் வைகோவும், திருமாவளவனும் நடிகர் கமல் தலைமையில் அமையும் கூட்டணியில் இணைவதற்கு தயாராகிவிட்டார்கள் என்கிறது, அரசியல் வட்டாரம்.
திமுக கைகழுவும் சூழலில் இவர்களுக்கு கைகொடுக்க கமல் தயாராகவே இருக்கிறார். கமலின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமையும் புதிய அணி சமூக நல கூட்டணி என்ற அடையாளத்துடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் சின்னம் கிடைக்காத நிலையில் கமல் சற்று கலக்கம் அடைந்த நிலையிலேயே இருந்தார். இன்னொரு புதிய சின்னத்தை 234 தொகுதிகளிலும் கொண்டு சென்று சேர்ப்பதில் அவருக்கு பெரும் சிக்கல் இருந்தது. ஆனால் இப்போது தனிச் சின்னம் கிடைத்து விட்டதால் அவர் உற்சாகம் அடைந்து இருக்கிறார்.
தனது அணிக்குள் இன்னும் சில கட்சிகள் வரலாம் என்றும் அவர் கருதுகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்த மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய குடியரசு கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ் மாநில முஸ்லிம் லீக் போன்றவை தற்போது திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கின்றன.
இந்தக் கட்சிகள் கடைசி நேரத்தில் தங்கள் அணியில் இணையும் என்று கமல் உறுதியாக நம்புகிறார். இதுதவிர அமமுக, ஒவைசியின் AIMIM, ஆகியவையும் தனது அணிக்கு வரும் என்பது அவருடைய பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்படி ஒரு வலுவான அணி அமையும் பட்சத்தில் அதற்கு சமூக நலக் கூட்டணி என்று பெயர் சூட்டப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த மெகா கூட்டணி அமைப்பதற்கான திரைமறைவு வேலைகளில் கமலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதற்கான பேச்சு வார்த்தையையும் அவர் தொடங்கிவிட்டார் என்றே கூறப்படுகிறது. மதிமுகவும் விசிகவும் திமுக அணியில் இருந்து வெளியேறிவிட்டால் அல்லது வெளியேற்றப்பட்டால் அவைகளுக்கு கமல் அணியுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை.
தங்களுக்கு கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துவிட்டு பின்னர் நைசாக ஒதுங்கிக் கொண்டதால் ஒவைசியின் AIMIM கட்சியும் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளது. இதனால் கமல் அணியில் நிச்சயம் அக்கட்சி இடம் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது.
கமல் தலைமையில் உருவாகும் சமூக நல கூட்டணியில் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் கொண்டு வருவதற்கு இன்னொரு பக்கம் தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த புதிய அணியால் நிச்சயம் 22 முதல் 26 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றும் 50 தொகுதிகள் வரை கைப்பற்ற இயலும் என்று கமலுக்கு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார், என்கிறார்கள்.
இந்த கணிப்பின்படி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இருந்தால்
இழுபறி நிலை ஏற்பட்டு தொங்கு சட்டப்பேரவை உருவாகலாம்.
அப்போது கமல் ஆதரிக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும்.
ஒருவேளை, பெரும்பான்மை கிடைக்காத இரு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்று கமலை ஆதரிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகும்.
இதெல்லாம் நடக்குமா?… என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயல்பு. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுதான் அரசியலின் விசித்திரம்.
0
0