புதிய கல்விக் கொள்கை : விவாதங்கள்…விவகாரங்கள்.. ஒரு அலசல்!!

4 August 2020, 12:13 pm
National-Education-Policy_ updatenews360
Quick Share

மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அறிவார்ந்த அமைப்பு இந்தப் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திருக்கிறது. இது குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை ஆராய்வதற்கு முன்னால், இந்தக் கல்விக் கொள்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

தற்போதைய பாடத்திட்டம் 10+2 என்று அமைந்துள்ளது – இது 1978ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள திட்டம். இதை இப்போது புதிய கல்விக் கொள்கை மூலம் 5+3+3+4 என்பதாக வடிவமைத்துள்ளார்கள். இது மாணவர்களின் வயதை வைத்து பிரித்ததாகும் (3 வயது முதல் எட்டு வயது வரை ஐந்து வருடங்கள், 8 முதல் 11 வரை மூன்று வருடங்கள், 11 முதல் 14 வரை மூன்று வருடங்கள், 14 முதல் 18 வரை நான்கு வருடங்கள் 5+3+3+4)

அதாவது அடிப்படை நிலை, மைய நிலை, உயர் நிலை, மேல்நிலை என்பதாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதற்காக மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேர்வுகள் உண்டு.

அடிப்படை நிலை (Fundamental stage) :-

இது ஐந்தாம் வகுப்பு வரையிலான ஐந்து ஆண்டுகளைக் குறிப்பது. இது பாலர் கல்வி, அடிப்படைக் கல்வி என்று இரண்டு துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பாலர் கல்வி முறை வேடிக்கை செயல்பாட்டு முறையிலும், அடிப்படை கல்வி கலந்தாலோசித்து போதிக்கும் முறையிலும் இருக்கப் போவதாகச் சொல்லப் படுகிறது. மூன்று வயதில் பள்ளியில் சேரும் குழந்தை ப்ரிகேஜி, எல்கேஜி, யுகேஜி , ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு வரையிலான படிப்பு வரை வேடிக்கை செயல்பாட்டு முறையிலும் , மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அடிப்படை கல்வியும் கற்பிக்கப் படும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய்மொழியே கற்கும் மொழியாக இருக்கும். இம்முறையின்படி ஐந்தாம் வகுப்பை முடிக்கும் ஒரு சிறுவன் அடிப்படை மொழி அறிவையும், கணித அறிவையும் பெற்றவனாக இருப்பான். இதை FLN அதாவது Fundamental Literacy and Numeracy என்பார்கள்.

மைய நிலை (Middle stage) :-

இது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மூன்று வருடங்களைக் குறிப்பது. இதில் மாணவர்களை மேலும் முன்னெடுக்கும் வகையில் செயல்பாடு சார்ந்த கல்வியாக இருக்கும். மாணவனை முழுக்க உற்பத்தி சார்ந்த, கைவினை சார்ந்த, மின்துறை, மின்னணுத்துறை சார்ந்த பயிற்சி பெற்றவனாக ஆக்கிவிடும் வகையில் இந்த நிலை அமையும். Vocational training அதாவது தொழில் சார்ந்த கற்றலுக்கு இதில் இடமுண்டு.

இந்த நிலையில் மாணவனுக்கு மும்மொழித் திட்டம் அறிமுகப் படுத்தப் படும். தாய்மொழி, இந்திய மொழி, அயல் நாட்டு மொழி ஆகிய மூன்று மொழிகளைப் பயில வேண்டும். இந்தியாவின் புராதன மொழிகளான தமிழ், சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், தெலுங்கு போன்றவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அயல்நாட்டு மொழிகளில் ஆங்கிலம், சீனம், கொரியா, பிரெஞ்சு போன்ற மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உயர்நிலைக் கல்வி (Secondary Stage) :-

இந்த நிலையில் மாணவன் தன் விருப்பத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே மாணவன் எந்தத் துறையில் பளிச்சிடுகிறான் என்பதை அறிவதற்கான comprehensive report ஐ தயார் செய்து அதன் மூலம் மாணவனின் ஆர்வத்தையும், அவன் வல்லவனாகத் திகழும் துறையையும் கண்டறியலாம். பிடிக்காத துறையில் படிக்கும் பேராபத்து குறையும். கல்லூரியில் பயிலுவதற்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும்

மேல்நிலைக் கல்வி :-

இந்த நிலையில் – மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து மதிப்பெண் வாங்கும் நிலையை மாற்றி –
மாணவனுடைய அறிவு கூர்மையடையும் வகையிலும், அது அவனுக்கு பயன்படக் கூடிய அறிவாகவும் விளங்கும் வகையில் இந்த நிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க மாணவனை படைப்பாக்கத் திறன் உள்ளவனாக உருவாக்குகிற நிலை இது.

புதிய கல்விக் கொள்கைப் படி இந்த 5+3+3+4 கல்வியை முடித்துவிட்டு வரும் மாணவன் வடிவமைப்புத் திறன் – முடிவெடுக்கும் திறன் – தூய வாழ்வியல் – உலகளாவிய கல்வித் திறன் ஆகியவற்றை உடையவனாக இருப்பான்.

இதுதானய்யா இந்தப் புதிய கல்விக் கொள்கை சொல்வது.

இதை எதிர்ப்போர்கள் என்ன சொல்கிறார்கள்?

1) மும்மொழித் திட்டம் கூடாது. இது இந்தி/சமஸ்கிருதத்தை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி

2) மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் கூடாது. இது மாணவனுக்குத் தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

3) பொது நுழைவுத் தேர்வு கூடாது. ஏனெனில் சென்னை போன்ற மாநகரங்களில் கல்வி பயிலும் ஒருவனும், குக்கிராம மாணவனும் ஒரே தராசில் நிறுத்தப் படக் கூடாது. இது நடைமுறைக்கு வருமானால் பெருநகர மாணவர்களே எல்லா உயர்கல்வி இடங்களையும் ஆக்ரமித்துக் கொள்வார்கள். கிராம மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை இழப்பார்கள்.

சரி! இதை ஆதரிப்போர் என்ன சொல்கிறார்கள்?

1) தாய்மொழிக் கல்வியை மேம்படுத்தும் திட்டம் இது. எல்லா மாணவர்களும் கட்டாயம் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் தான் பயில வேண்டும் என்பது உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும்

2) கல்வியின் தரம் உயரும். மனப்பாட வாந்தி இனி இருக்காது. சப்ஜக்டைப் புரிந்து கொண்டு படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

3) செயல்பாட்டு முறையிலும் கல்வி அமைந்துள்ளதால் வெறும் சேவைத் துறையில் மட்டுமே ஒருமுகப் பட்டுள்ள நம் நாடு இனி உற்பத்தித் துறையிலும் சிறந்து விளங்குவதற்கான கல்வியாய் இது அமையும்.

சரி !! இதை முழுவதும் படித்த நாம் என்ன சொல்கிறோம்?

இதை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இரு தரப்பினருமே இந்தக் கல்விக் கொள்கையை சரிவரப் படிக்கவில்லை.
இது ஒரு நடைமுறை சாத்தியமே இல்லாத கனவுத் திட்டம். இதன் முன்னுரையிலேயே இதன் சாத்தியமில்லாத தன்மை விளங்கி விடுகிறது.

இது இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் அவர்களின் கனவுக் கைவண்ணம். இது மட்டும் முழுமையாகச் செயல்படுத்தப் பட்டால் உலக நாடுகள் அனைத்தும் நம் முன்னே கைகட்டி நிற்கும். ஆனால் செயல்வடிவம் கொடுக்க முடியாத அளவுக்கு உயர்ந்த திட்டம்.

ஆனானப்பட்ட சர்வாதிகார நாடான சீனாவிலே கூட இதை முழுமையாக நடைமுறைப் படுத்த முடியாத நிலையில், ஜனநாயகத் தான்தோன்றித் தனமான நாடான இந்தியாவில் இதை ஒரு பேப்பர் வடிவமாக மட்டுமே காணலாம்.
இது காகித உருவிலான கலர் கனவு.

இதற்குத் தேவையான கட்டமைப்பில் நூறில் ஒரு பங்கு கூட நம்மிடம் இல்லை. இதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு சொல்லித் தர வேண்டும். அதை உளமாரக் கற்கும் ஆசிரியர்கள் இப்போது யாருமில்லை. இனி வருங்காலத்தில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களை வேண்டுமானால் முறையாகப் பயிற்றுவிக்கலாம். தற்போதைய ஆசிரியர்களில் பலர் தாய்மொழியில் ஒரேயொரு பக்கம் கூட பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள்.

தகுதியான ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக இத்திட்டம் சொல்கிறது. அந்த ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? நமது மாநில அரசிடம்தானே! ஆஹா!

இம்மாதிரி திறமை சார்ந்த கல்வியை போதிக்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு யோக்யதை இல்லாத நிலையில் பிரைவேட் பள்ளிகளை நோக்கித்தான் கூட்டம் ஓடும்.

இம்மாதிரி மிக உயர்ந்த கல்வித் திட்டத்தை முனைப்பாக செயல்படுத்த, நல்ல கட்டமைப்பு, திறன் மிகு ஆசிரியர்கள், தூய்மையான சூழல், தகுதியான பரிசோதனைக் கூடங்கள், தேவையான கருவிகள், மாணவர்களுக்கு அனைத்தையும் விளக்கிடும் அறிவுசார் நூலகங்கள், காற்றோட்டமான விளையாட்டு மைதானங்கள், தகுதியில் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஊக்குவிக்கும் பெற்றோர், நேர்மையான ஆசிரியர் தேர்வு முறை, கட்டிடம் கட்டுவதிலிருந்து கருவிகள் வாங்குவது வரை நேர்மையான, கமிஷன் பெறாத அதிகாரிகள் நியமனம், ட்யூஷன் எடுத்துச் சம்பாதிக்க நினைக்காத ஆசிரியர்கள் ……… இவ்வளவும் தேவை.

இதெல்லாம் சாத்தியமா சார்!

முதலில் இந்த திட்டம் வராது, அப்படியே வந்தாலும் முழுமையாக வராது, அங்கங்கு அறுபட்டு, கிழிந்து தொங்கி ஏதோ கோணல் மாணலாக “புதிய கல்வித் திட்டம்” என்கிற பெயரில் எப்படியோ ஒன்று அறிமுகப்படுத்தப் படலாம். அதற்கு இப்போது இருப்பதே தேவலாம் என்று ஆகிவிடும்.

உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர், சில காரியங்களை செய்தாக வேண்டும்.

1) கள ஆய்வு, அதாவது தற்போது உள்ள நிலைமை, தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பு, இந்த நிலையை மாற்றி முன்னெடுத்துச் செல்ல தேவையான வசதிகள் என்னென்ன..? அவற்றை செய்ய இயலுமா..? இயலாதா…? என்பது குறித்த தெளிவான பார்வை…? அந்தப் புதிய திட்டத்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா..? ஏற்பட்டால் அதைக் களைவதற்கு நமக்குத் தேவைப்படுவது என்னென்ன..? அவற்றை வாங்கும் வசதி நமக்குண்டா… நகர மாணவனையும் கிராம மாணவனையும் இணைக்கும் புள்ளி எது..? தற்போதைய ஆசிரியர்களின் தராதரம் என்ன..? இவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய கனவை நிறைவேற்ற முடியுமா..? இவர்களுக்கான பயிற்சி தரப் போவது எப்படி..? இந்தப் புதிய சூழலுக்கு ஏற்ப சிறு குழந்தைகளைத் தயார்ப் படுத்துவது எப்படி..? பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவது எப்படி..?

இப்படி எவ்வளவோ கேள்விகளை நம் முன்னே வைத்துக் கொண்டு – இதையெல்லாம் செய்ய இயலும் என்று நன்கு தெரிந்த பின்பே, அதன் பூர்வாங்க ஏற்பாடுகளைத் தயாராக வைத்திருக்கும் நிலையில் அறிமுகமாக வேண்டிய திட்டம் இது.

எனவே இது ஆளுங் கட்சிக்கும், எதிர்க் கட்சிகளுக்குமான ஓர் அரசியல் அதிரடியே தவிர, ஆக்கப்பூர்வமான, அர்ப்பணிப்பு உணர்வோடு அறிமுகப் படுத்தப் பட்ட திட்டம் அல்ல!

நல்ல கனவுதான், ஆனால்
மெய்ப்பட வேண்டுமே!

Views: - 11

0

0