தமிழ் மொழி மீது ஆர்வம் காட்டும் ஆளுநர் ஆர்.என். ரவி… தொன்மை நாகரீகம் கொண்ட தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி என பேட்டி..!!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 11:40 am
governor rn ravi - updatenews360
Quick Share

தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன் என்று தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

மிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வணக்கம் எனக் கூறி அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி. என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.

மிகக் குறைந்த காலம் பத்திரிக்கையாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. அரசியல் அமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் எனது பணிகள் இருக்கும். தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுநர் பதவி என்பது விதிகளுக்குட்பட்டது. அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை. மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளுக்கு செல்வது குறித்தெல்லாம் தற்போது கூற முடியாது, எனக் கூறினார்.

Views: - 213

1

0