ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு : மாற்று வழியை யோசிக்குமாறு கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
2 October 2021, 2:20 pm
tiger - vantathi - updatenews360
Quick Share

நீலகிரி : கூடலூர் அருகே உலா வரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மேபீல்டு பகுதியில் கடந்த ஏழு நாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் 3 மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர் பாடி இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது.

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புலியை கண்டால் சுட்டுக்கொல்ல வேண்டும் என தமிழ்நாடு வன உயிரின பாதுகாவலர் அதிரடி உத்தரவிட்டார். அதன் பேரில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்கு வந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. புலி என்பது நம் தேசிய விலங்கு என்பதோடு குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயிரினம். அதனை பொதுமக்கள் உதவியோடு புலியை மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Views: - 422

0

0