பொதுப் போக்குவரத்தால் தொற்று பரவல் இல்லை : தளர்வுகள் அதிகரித்தாலும் தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா..!

10 September 2020, 3:42 pm
Bus corona- updatenews360
Quick Share

சென்னை: தளர்வுகள் அதிகரித்தால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்ற அஞ்சப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தமிழக அரசு. சோதனை எண்ணிக்கை 80-ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 6,000-த்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழ் வந்துள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் அரசுப் பேருந்து அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியவுடன் பொதுப் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பொதுப் போக்குவரத்து சில மாவட்டங்களில் துவங்கப்பட்டபோது, தமிழ்நாடு எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சென்னை தவிர்த்த பிற மண்டலங்களுக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, எல்லா வகையிலான பொதுப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.


இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து அந்தந்த மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில், மாநில அரசு செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்தது. மாநிலத்திற்குள்ளும் பயணியர் ரயில் போக்குவரத்தை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்தது. சென்னைக்குள் இயங்கும் மெட்ரோ ரயில் சேவைகள் 7ம் தேதியிலிருந்து இயங்கி வருகிறது. சென்னை புறநகர் ரயில் சேவைகளைத் தவிர அனைத்து போக்குவரத்தும் இயங்கி வருகிறது. வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் பெருமளவில் சென்று வருகின்றனர். அனைத்து அரசு அலுவலங்களும், தனியார் அலுவலங்களும், வணிக நிறுவனங்களும் கடைகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

பொதுப்போக்குவரத்தைத் தொடங்கினால் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பயணம் செய்தாலும் சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை என்ற நிலையும் சென்னையில் பல இடங்களில் காணப்பட்டது. மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றைக் எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவரப்போகிறது சந்தேகம் தெரிவித்ததோடு மீண்டும் கொரோனாப் பரவல் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தைத் தெரிவித்தனர்.

ஆனால், அரசு திறமையாக செயல்பட்டு கொரோனாப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பொதுப்போக்குவரத்து தொடங்குவதற்கு முன் சென்னையில் புதிய கொரோனாத்தொற்று நாள்தோறும் 1200-க்கு மேல் இருந்தது. பேருந்துப் போக்குவரத்து தொடங்கியபின் புதிய தொற்று நாள்தோறும் ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

பொதுப்போக்குவரத்து தொடங்குமுன் நாள்தோறும் 6000-த்துக்கு மேற்பட்ட புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தினமும் 80,000-க்கும் மேற்பட்ட பரிசோதனை நடைபெறும் நிலையில், புதிய நோய்த்தொற்று 6-000-த்துக்கும் கீழே சரிந்துள்ளது. மொத்த பரிசோதனையில் நோய்த்தொற்றின் அறிகுறி 6.9 சதவீதம் பேருக்கே காணப்படுகிறது. இறப்பு விகிதமும் தொடர்ந்து நாள்தோறும் 100-க்கு கீழேயே காணப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50-ஆயிரத்துக்கும் கீழே வந்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னையில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 10,854 ஆக இருக்கிறது.

பொதுப் போக்குவரத்து தொடங்குவதால் கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பில்லை என்பதே தற்போதைய அனுபவத்தில் தெரிகிறது. ஆனால், கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டால் அக்டோபர் மாதத்தில் பதிய கொரோனா அலை தோன்றலாம் என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எச்சரித்து வரும் நிலையில், அனைத்து பயணத்தின்போதும், பொது இடங்களிலும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதே கொரோனாத் தொற்றைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கும். கொரோனாத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அது அளிக்கப்பட்டால்தான் பழைய நிலைக்குத் திரும்ப முடியும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Views: - 8

0

0