நவ., முதல் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி..? உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

13 October 2020, 12:22 pm
Merina Case-Updatenews360
Quick Share

சென்னை : மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் முதுல் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவ நல அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரை பராமரிப்பது மற்றும் தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்துவது குறித்து விசாரிக்கப்பட்டது.

மேலும், கொரோனா ஊரடங்கு சமயத்தில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா..? எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “இதுவரைக்கு மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போது, ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், பொதுமக்களை அனுமதிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நவ.,1ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை முழுவதும் அகற்றப்பட்டு விட்டதா..? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, முழுவதும் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீன் வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தப்படுத்தி அழகானதாக மாற்ற வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையர் வாய்ப்பிருந்தால் மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை நவ.,11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Views: - 0

0

0