அறிவுரை சொன்னால் கேட்பதில்லை…! ‘ஆடியோ’ சசிகலாவுக்கு சீமான் சூடு

14 July 2021, 11:13 am
sasikala - seeman 11- updatenews360
Quick Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாரையெல்லாம் விரும்பி, தானாகச் சென்று சந்திக்கிறாரோ, அவர்களிடமெல்லாம் மறைமுகமாக நிறையவே வாங்கியும் கட்டிக் கொள்கிறார்.

சசிகலா கொடுத்த அழுத்தம்

4 ஆண்டு சிறைவாசம் முடிந்து, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலாவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி அன்று தி. நகர் வீட்டுக்கே சென்று சீமான் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் அரசியல் குறித்து பேசியதாகவும் அப்போது கூறப்பட்டது. முதலில் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக கூறிய சீமான், சில நாட்கள் கழித்து அரசியல் பற்றியும் பேசியதாக ஒப்புக்கொண்டார்.

எனினும், அப்போது அவர் சசிகலாவுடன் பேசியதில் பல விஷயங்கள் முழுமையாக வெளியே வரவில்லை.

குறிப்பாக, தன்னை ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று கட்டாயம் சந்தித்துப் பேசியே ஆகவேண்டும் என்று சசிகலா கொடுத்த நெருக்கடியால்தான் சீமான் அன்றைய தினம் அவரை சந்தித்தார் என்பது இதில் மிக முக்கியமானது.

அதேநேரம் தினகரனின் அமமுகவுடன், சட்டப் பேரவை தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டும் என்று சசிகலா கொடுத்த அழுத்தத்தையும், அதற்கு சீமான் மறுத்து விட்டதையும் அவர் வெளியே கூறவில்லை, என்கிறார்கள்.

திமுக எதிர்ப்பு அரசியல்

தேர்தலில் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அமமுகவை மிஞ்சி விட்டதால் சீமானின் செல்வாக்கு ஓட்டுகள் ரீதியாக பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு வந்த சீமான் தற்போது சசிகலா, தினகரன் போன்றவர்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு அரசியலில் பல படிகள் முன்னேறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 4-ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலினை சீமான் சந்தித்துப் பேசினார். அப்போது வானளாவ ஸ்டாலினை அவர் புகழவும் செய்தார். அதனால் சீமானுக்கு ‘நெகட்டிவ் இமேஜ்’தான் கிடைத்தது.

Stalin Seeman- Updatenews360

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்ற யூகங்களும் ஊடகங்களில் வெளியானது. இதனால் அதிர்ந்து போன சீமான் அடுத்த சில நாட்களிலேயே திமுகவை மீண்டும் அட்டாக் செய்ய ஆரம்பித்தார். தற்போது திமுக எதிர்ப்பு அரசியல்தான் கைகொடுக்கும் என்று அவர் கருதுகிறார்.

இதனால் ஸ்டாலினின் கோபத்திற்கு அவர் உள்ளானதுதான் மிச்சம்.

எதுக்கு இந்த அவமானம்

இந்த நிலையில்தான் தொடர்ந்து ஆடியோ உரையாடல்களை வெளியிட்டு வரும் சசிகலா குறித்து சீமான் கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். பொழுதுபோக்குவதுபோல் தினமும் யாருடனாவது போனில் பேசி சசிகலா வெளியிடுவது அநாகரீகமான செயல் என்று காய்ச்சி எடுத்திருக்கிறார்.

சீமான் இதுபற்றி கூறும்போது, “சசிகலா தொடர்ச்சியாக ஆடியோ வெளியிட்டு வருவதை நான் ரசிக்கவும் இல்லை. விரும்பவும் இல்லை. அவர் எதற்காக இப்படி செய்கிறார், என்பதும் எனக்கு புரியவில்லை. போன் உரையாடல் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே அதை இப்படி ஆடியோவாக வெளியிடுவது சரியானது அல்ல. உளவுத்துறை கூட நான் பேசுவதை பதிவு செய்து வைத்துக் கொள்ளுமே தவிர வெளியிடாது.

ஆனால் ஒருவர் தன்னை மதித்து பேசும்போது அதனைப் பதிவு செய்து பொதுவெளியில் வெளியிடுவது அவமானகரமானது. முற்றிலும் நாகரீகமற்ற செயல். இது தலைமைப் பண்புக்கு துளியும் உகந்ததல்ல.

அப்படி தொண்டர்களை சந்திக்க வேண்டும், பேசவேண்டும் என்றால் ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் கட்சியை வழி நடத்துவேன். என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த தேதிக்கு, இந்த இடத்திற்கு வாருங்கள் என்று கூறி நேரடியாக பேசுவதுதான் சரியானதாக இருக்கும். அதை விடுத்து யாரிடமோ பேசி பதிவு செய்து அதை எல்லோருக்கும் பரப்பிட தொலைக்காட்சியில் போட அனுப்புவது சரியாக இருக்காது.

பார்க்கும் எல்லோரும் இது என்ன கொஞ்சம் கூட நாகரீகமான செயலாக தெரியலவில்லையே? என்றுதான் நினைப்பார்கள். நான் பலமுறை சசிகலாவிடம் இது நல்லதில்லை நிறுத்துங்கள் என்று கூறிவிட்டேன். ஆனால் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்” என்று காட்டமாக
வெடித்தார்.

இதனால் சீமான் மீது சசிகலா மிகுந்த கோபத்தில் இருக்கிறார், என்கிறார்கள்.
என்றபோதிலும் அவர் ஆடியோ உரையாடல் வெளியிடுவதை நிறுத்தவில்லை.

அன்று கேசட் கடை…. இன்று ஆடியோ

இதுபற்றி அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது,”சசிகலா 50-வது, 60-வது என ஆடியோ உரையாடல்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காக தினமும் 10,15 பேரிடம் பேசுகிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதுவரை அவருக்கு யாரும் போன் செய்து பேசவில்லை. உண்மையிலேயே அவருடைய விசுவாசிகளுக்கு சசிகலா அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புமும் ஆர்வமும் இருந்திருந்தால் அவர்களாகவே போன் செய்து பேசி இருப்பார்கள்.

மாறாக, இவர்தான் தொடர்ந்து, விடாமல் தினமும் துரத்தி துரத்தி போன் செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்னாலிருந்து தினகரன் ஆட்டுவிக்கிறார். இவர்கள் இருவருக்குமே, தங்களுக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்பது நன்றாக புரிந்து விட்டது.

sasikala - dinakaran - updatenews360

ஏனென்றால் தினகரன் கட்சி கூடாரம் முற்றிலுமாக காலியாகிவிட்டது. சசிகலாவின் ஆடியோ உரையாடல் நடவடிக்கையோ அவர் முழுக்க முழுக்க திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் தங்கள் உயிர் மூச்சு உள்ளவரை யாரை எதிர்த்து போராடினார்களோ அவர்களுடன் சசிகலா மறைமுகமாக கைகோர்த்து செயல்படுகிறார். இதை அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இருந்தாலும் ஏதாவது குட்டி கலாட்டா செய்து ஆலமரம் போன்ற அதிமுகவை அசைக்கப் பார்க்கிறார்.

கொரோனா பரவல் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அதனால் ஊரடங்கு
முடியும் வரை அவர் ஏன் காத்திருக்க வேண்டும்? இப்போதே கிளம்பி, ஊர் ஊராக தெருத் தெருவாக சென்று தனது ஆதரவாளர்களை சந்திக்க எந்த தடையும் இல்லை. அவரை வேடிக்கை பார்க்க விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே வருவார்கள் என்பதால் சமூக இடைவெளி, கூட்டம் கூடியது என்ற பேச்சுகளும் எழ வாய்ப்பில்லை. அதனால் அவர் ஏன் நல்ல நாள் பார்க்கவேண்டும்? இப்போதே தனது பயணத்தை தொடங்கி விடலாமே? 38 ஆண்டுகளுக்கு முன்பு, வீடியோ கேசட் கடை வைத்திருந்தவர் தற்போது ஆடியோவுக்கு மாறி இருக்கிறார். நல்ல முன்னேற்றம்.

சீமான் அட்வைஸ் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி அவருக்கு எதுவும் உரைக்கப் போவதில்லை. அவருடைய நோக்கமெல்லாம் அதிமுகவை அழிப்பதுதான். ஆனால் அது ஒருபோதும் நடக்காது” என்று அந்த நிர்வாகி ஆவேசமாக பொரிந்து தள்ளினார்.

Views: - 158

1

0