நம்பிக்கையோடு செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் : ஓபிஎஸ், இபிஎஸ் ஆயுதபூஜை வாழ்த்து..!!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 12:27 pm
eps ops - updatenews360
Quick Share

சென்னை: வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என்று தமிழக மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்.

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும்; “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்”என்று தெரிவித்துள்ளனர்.

Views: - 448

0

0