அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி மீண்டும் தேர்வு : தொண்டர்கள் உற்சாகம்…!!!

Author: Babu Lakshmanan
6 December 2021, 5:05 pm
ops-eps-updatenews360
Quick Share

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கான தேர்தல்‌ அறிவிப்பு கடந்த 2ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள்‌ 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில்‌ தலைமைக்‌ கழகத்தில்‌ பெறப்பட்டன. அதில்‌, ஓ. பன்னீர்செல்வம்‌ ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌; எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கும்‌, கடந்த 4ம் தேதி அன்று இருவரும்‌ இணைந்தே வேட்பு மனுவை தாக்கல்‌ செய்தனர்‌.

ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட வேண்டி, தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌, மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, முன்னாள்‌ அமைச்சர்கள்‌ உள்ளிட்ட கழகத்தில்‌ பல்வேறு பொறுப்புகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌ வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்‌.

இந்த வேட்பு மனுக்கள்‌ நேற்று கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக பரிசீலனை செய்யப்பட்டன. அதன்படி, ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு ஓ. பன்னீர்செல்வமும்‌, இணை ஒருங்கிணைப்பாளர்‌ பொறுப்பிற்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட வேண்டி ஒரே ஒரு மனு மட்டுமே தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளதாலும்‌, அவர்களுடைய மனு கழக சட்ட திட்ட விதி – 20 : பிரிவு-2ன்படி சரியாக உள்ளதாலும்‌, இருவரும்‌ அந்தப் பொறுப்புகளுக்கு ஒருமனதாக
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்‌ என்பது அறிவிக்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 257

0

0