தமிழக நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி தொடரும் : வார்த்தைப் போருக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்…!!

7 July 2021, 2:46 pm
ops - modi - updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி 65 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்கட்சியாக உள்ளது. இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஆய்வு செய்து, எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைத்திருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தலின் போதுதான் முடிவு செய்யப்படும் என பாஜக கூறியுள்ளது.

இதனிடையே, இன்று விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அம்மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம். அதனால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிட்டது,” எனக் கூறினார்.

CV Shanmugam - Updatenews360

சிவி சண்முகத்தின் பேச்சு பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து தொடர்பாக பாஜகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “உட்கட்சி கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியுள்ளார். வெளிப்படையாக அவர் கருத்து தெரிவிக்கவில்லை. தேர்தல் தோல்வி தொடர்பான சர்ச்சையில் கட்சி தலைமை உரிய முடிவெடுக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணிக் கட்சி பற்றி தெரியும்,” எனக் கூறினார்.

இந்த நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாபவது :- பாரதிய ஜனதா கட்சி மீதும்‌, மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடி அவர்கள்‌ மீதும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன்‌ கருதியும்‌, தமிழ்நாட்டின்‌ நலன்‌ கருதியும்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும்‌. இதில்‌ எவ்வித மாற்றுக்‌ கருத்திற்கும்‌ இடமில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பின் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி இடையிலான குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Views: - 154

0

0