விளை நிலங்களின் ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்க : ஓபிஎஸ் வலியுறுத்தல்

17 July 2021, 3:19 pm
Quick Share

சென்னை : விளை நிலங்களின் ஊடே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது :-மக்களுக்காக இயற்றப்படும்‌ சட்டங்கள்‌ மற்றும்‌ வகுக்கப்படும்‌ திட்டங்களால்‌ மக்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்பட்டுவிடக்‌ கூடாது என்பதில்‌ கண்ணும்‌ கருத்துமாக இருந்தவர்‌ மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவிஅம்மா அவர்கள்‌. அதனால்தான்‌, மண்ணைவிட்டு மறைந்தாலும்‌ மக்களின்‌ மனங்களில்‌ நிறைந்திருக்கிறார்‌. கேரள மாநிலம்‌, கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை, தமிழ்நாட்டின்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, தருமபுரி மற்றும்‌ கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின்‌ விவசாய நிலங்களின்‌ ஊடே 310 கிலோ மீட்டர்‌ தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும்‌ குழாய்கள்‌ அமைக்கும்‌ பணியினை மேற்கொள்ள கெயில்‌ நிறுவனம்‌ அதாவது, திட்டமிட்டு அதற்கான நட.வடிக்கைகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக சென்னை உயர்‌ நீதிமன்றத்திலும்‌ வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தத்‌ திட்டம்‌ விவசாயிகளின்‌ விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்பதன்‌ அடிப்படையிலும்‌, சென்னை உயர்‌ நீதிமன்ற உத்தரவின்‌ அடிப்படையிலும்‌. மாண்புமிகு முன்னாள்‌ முதலமைச்சர்‌ இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, விவசாயிகளின்‌ கருத்துகளை கேட்டறிய உத்தரவிட்டார்கள்‌. அதன்படி, பொதுக்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டங்கள்‌ 6-03-2013, 7-03-2013 மற்றும்‌ 8-03-2013 ஆகிய நாட்களில்‌ தமிழக அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ அண்ணா மேலாண்மை நிலைய கூட்டரங்கத்தில்‌ நடைபெற்றது. இந்த பொதுக்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டங்களில்‌ மேற்குறிப்பிடப்பட்ட ஏழு மாவட்டங்களின்‌ 134 கிராமங்களைச்‌ சார்ந்த 2,428 விவசாயிகள்‌ மற்றும்‌ நில உரிமையாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

இந்தக்‌ கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டங்களில்‌ கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும்‌, கெயில்‌ நிறுவனம்‌ எரிவாயுக்‌ குழாய்‌ அமைத்தால்‌ விவசாயிகளின்‌ பொருளாதார நிலைமை சூடுமையாக பாதிக்கப்படும்‌ என்றும்‌, நிலங்களின்‌ மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்‌ என்றும்‌, எரிவாயுக்‌ கசிவு ஏற்படும்‌ வாய்ப்பு உள்ளதாகவும்‌, விவசாயப்‌ பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும்‌ என்றும்‌ தெரிவித்தனர்‌.

கெயில்‌ நிறுவனத்தால்‌ 8-3-2013 தேதியிட்டு தலைமைச்‌ செயலாளருக்கு அனுப்பப்பட்ட சுடிதத்தில்‌, தேசிய நெடுஞ்சாலை வழியாகக்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணியை மேற்கொண்டால்‌ அந்தப்‌ பணிகள்‌ முடியும்‌ வரை தேசிய நெடுஞ்சாலையில்‌ போக்குவரத்துப்‌ பாதிப்புகள்‌ ஏற்படும்‌ என்றும்‌, தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள்‌ பதிக்கும்‌ பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம்‌ பொதுவாக அனுமதி வழங்காது என்றும்‌, ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர்‌ தூரத்திற்குக்‌ கூடுதல்‌ வால்வு நிலையம்‌ அமைக்க வேண்டியிருப்பதால்‌, பாதுகாப்பு மற்றும்‌ பராமரிப்பு பிரச்சினைகள்‌ ஏற்படும்‌ என்றும்‌, ஏற்கெனவே வாங்கப்பட்ட பொருட்கள்‌, குழாய்கள்‌ மற்றும்‌ திட்ட வடிவமைப்பில்‌ மாற்றம்‌ கொண்டு வரப்பட வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும்‌ பரிசீலித்த மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு, கெயில்‌ நிறுவனம்‌ விவசாய விளைநிலங்கள்‌ வழியாக எரிவாயுக்‌ குழாய்களைப்‌ பதிக்கும்‌ திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென்றும்‌, இத்திட்டத்திற்கான குழாய்களை தமிழக விவசாயிகளின்‌ வேளாண்‌ நிலங்கள்‌ பாதிக்காத வகையில்‌ நெடுஞ்சாலைகளின்‌ ஒரமாகப்‌ பதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும்‌, விவசாயிகள்‌ தங்களது விவசாயப்‌ பணிகளைத்‌ தொடரும்‌ வகையில்‌ ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களை கெயில்‌ நிறுவனம்‌ உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும்‌, இதற்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்‌ என்றும்‌ முடிவெடுத்து, அதனை சென்னை உயர்‌ நீதிமன்றத்திலும்‌ தெரிவித்தது.

இருப்பினும்‌, சென்னை உயர்‌ நீதிமன்ற ஆணை மற்றும்‌ உச்ச நீதிமன்ற ஆணை கெயில்‌ நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்ததால்‌, மாண்புமிகு அம்மா அவர்கள்‌ இதுதொடர்பாக மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்கு 8-2-2016 அன்று ஒரு கடிதத்தை எழுதினார்கள்‌. அதில்‌, தேசிய நெடுஞ்சாலை ஒரமாக எரிவாயுக்‌ குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுத்து இந்தப்‌ பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்கள்‌. இதனையடுத்து, விவசாயிகள்‌ போராட்டம்‌ காரணமாக இந்தத்‌ திட்டத்தில்‌ முன்னேற்றம்‌ ஏற்படவில்லை.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, அண்மையில்‌ ஒசூர்‌ வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயிகள்‌ நிலங்கள்‌ ஊடே எரிவாயு குழாய்‌ அமைக்கும்‌ திட்டத்தினை கெயில்‌ நிறுவனம்‌ மீண்டும்‌ தொடங்கியுள்ளதாகவும்‌, கெலமங்கலத்தில்‌ விளை நிலங்களில்‌ குழிகள்‌ தோண்டப்பட்டு குழாய்கள்‌ பதிக்கும்‌ பணிகள்‌ மும்முரமாக நடைபெற்று வருவதாகவும்‌, இதையறிந்த விவசாயிகள்‌ போராட்டத்தினை அந்தப்‌ பகுதியில்‌ நடத்தியதோடு, இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடம்‌ கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும்‌ தகவல்கள்‌ வந்துள்ளன. இந்தத்‌ திட்டம்‌ புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி-ஒசூர்‌ நான்கு வழிச்‌ சாலையில்‌ சாலையோரம்‌ அமைக்கப்பட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின்‌ எதிர்பார்ப்பு.

“திட்டத்திற்காக மக்கள்‌ அல்ல, மக்களுக்காகவே திட்டம்‌’ என்பதன்‌ அடிப்படையில்‌, விளை நிலங்களின்‌ ஊடே எரிவாயு குழாய்‌ பதிக்கும்‌ பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின்‌ வேளாண்‌ நிலங்கள்‌ பாதிக்காத வகையில்‌ நெடுஞ்சாலைகளின்‌ ஓரமாகப்‌ பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 171

0

0