அந்த 4 மாநிலங்களில் பசுமை பட்டாசு பற்றி எடுத்துச் சொல்லுங்க… தொழிலாளர்களுக்கு கைகொடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
16 October 2021, 6:17 pm
Quick Share

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களில் பசுமை பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தீபாவளி என்றாலே பட்டாசும்‌, அது அதிக அளவில்‌ தயாரிக்கப்படும்‌ இடமான சிவகாசியும்‌ தான்‌ நம்‌ நினைவிற்கு முதலில்‌ வருகிறது. இதன்‌ மூலம்‌ இலட்சக்கணக்கான தொழிலாளர்கள்‌ பயன்‌ பெறுவதுடன்‌, தமிழ்நாட்டின்‌ பொருளாதாரமும்‌ மேம்படுகிறது. ஆனால்‌, தற்போது இந்தத்‌ தொழிலே முடங்கக்கூடிய அபாயம்‌ ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுத்‌ தொழில்‌ பாதிப்பினை சந்தித்து வந்த சூழ்நிலையில்‌, உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பிற்குப்‌ பிறகு பட்டாசு உற்பத்தி துவங்கிய நிலையில்‌, கொரோனா தொற்று நோய்‌ காரணமாக கடந்த ஆண்டு
பட்டாசு விற்பனை சரிவை சந்தித்தது. பின்னர்‌, கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப்‌ பின்‌, சில கட்டுப்பாடுகளுடன்‌ பட்டாசு உற்பத்தி துவங்கப்பட்டு, வெளி நாடுகளுக்கும்‌, வெளிமாநிலங்களுக்கும்‌ அனுப்பி வைக்கும்‌ சூழ்நிலை உருவானது.

இருப்பினும்‌ சென்ற ஆண்டே ராஜஸ்தான்‌ மாநில அரசு பட்டாசு விற்பனைக்கு அம்மாநிலத்தில்‌ தடை விதித்தது. இதன்‌
காரணமாக, பட்டாகத்‌ தொழில்‌ சற்று பாதிக்கப்பட்டது. இந்தச்‌ சூழ்நிலையில்‌, இந்த ஆண்டு டில்லி, ஒடிசா, ராஜஸ்தான்‌,
அரியானா போன்ற மாநிலங்களில்‌ பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு தொழிலில்‌ ஈடுபட்டிருப்போர்‌ மத்தியில்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும்‌ நேரத்தில்தான்‌ இதுபோன்ற பாதிப்புகள்‌ ஏற்படுகின்றன என்றும்‌, இதனால்‌ இலட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரம்‌ பெரிதும்‌ பாதிக்கப்படுவதாகவும்‌, அரசுக்கும்‌ வருவாய்‌ இழப்பு ஏற்படுவதாகவும்‌ இத்தொழிலில்‌ ஈடுபட்டிருப்போர்‌ தெரிவிக்கின்றனர்‌.

மேலும்‌, பட்டாசுகளால்‌ காற்றில்‌ ஏற்படும்‌ மாசு விரைவில்‌ கரையக்கூடியது என்றும்‌, ‘நீரி’ அமைப்பினுடைய வழிகாட்டுல்கள்‌ மற்றும்‌ தேசிய சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின்‌ பரிந்துரை ஆகியவற்றின்படி தான்‌ பட்டாசுகள்‌ தயாரிக்கப்படுவதாகவும்‌, உச்சநீதிமன்றத்தால்‌ தடை செய்யப்பட்டுள்ள பட்டாசுகள்‌ தயாரிக்கப்படுவதில்லை
என்றும்‌, மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகள்‌ மட்டுமே தயாரிக்கப்படுவதாகவும்‌, எனவே பட்டாசு விற்பனைக்கு ஏற்பட்டுள்ள தடையினை நீக்க மத்திய மாநில அரசுகள்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்‌, இந்த நிலைமை தொடர்ந்தால்‌ பட்டாசுத்‌ தொழிலே அழியக்கூடிய நிலைமை ஏற்படும்‌ என்றும்‌ இத்தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோர்‌
தெரிவிக்கின்றனர்‌.

‘தனி மனிதனின்‌ வாழ்வில்‌ மட்டும்‌ இன்ப ஒளி நிறைந்தால்‌ போதாது. சமுதாயத்தின்‌ அங்கமாகிய மக்கள்‌ அனைவரின்‌ உள்ளங்களிலும்‌ தீப ஒளிகள்‌ ஏற்றப்பட வேண்டும்‌, தீபாவளி என்பது ஏழைகளுக்கும்‌ கைக்கெட்டும்‌ கனியாகச்‌ சிறந்து விளங்க வேண்டும்‌’ என்ற தத்துவத்தை பட்டாசுத்‌ தொழிலில்‌ ஈடுபட்டிருப்போரும்‌ பெற வேண்டும்‌ என்பதுதான்‌ அனைவரின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றும்‌ முகத்தான்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களும்‌ டில்லி, ஒடிசா, ராஜஸ்தான்‌ மற்றும்‌ அரியானா மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்‌ எழுதியிருக்கிறார்கள்‌.

ஆனால்‌ இதற்கு அந்தமாநிலங்கள்‌ செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இதில்‌ உடனடியாக தலையிட்டு, சிவகாசியில்‌ பசுமை பட்டாசுகள்‌ மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பதையும்‌, இதன்மூலம்‌ காற்று மாசு ஏற்படாது என்றும்‌ தொலைபேசி மூலமோ, அல்லது அமைச்சர் பெருமக்களை நேரில்‌ அனுப்பியோ உண்மையை அந்தந்த மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்வதோடு, காங்கிரஸ்‌ கட்சி ஆட்சி நடக்கின்ற ராஜஸ்தான்‌ மாநில முதலமைச்சருக்கு அகில இந்திய காங்கிரஸ்‌ கட்சிமூலம்‌ அழுத்தம்‌ கொடுத்தும்‌, அரியானா மாநில முதலமைச்சருக்கு மத்திய அரசு மூலம்‌ வலியுறுத்தியும்‌, பிராந்திய கட்சிகள்‌ஆளுகின்ற டில்லி மற்றும்‌ ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன்‌ தனக்குள்ள நெருக்கத்தை
பயன்படுத்தியும்‌, அந்தமாநிலங்களில்‌ பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 233

0

0