முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலம் பாதிப்பு… விவாதமாகிப் போன ஓபிஎஸ் போட்ட பதிவு…!

Author: Babu Lakshmanan
13 July 2022, 5:59 pm
Stalin ops - updatenews360
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்ட டுவிட் தற்போது விவாதமாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதோடு, திமுகவுடன் மறைமுக உறவு வைத்து அதிமுகவை அழிக்க முயற்சித்ததாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும், திமுகவுக்கு மறைமுக தொடர்பு இருக்குமோ..? என்ற பேச்சும் அடிபடத் தொடங்கியது.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைந்து நலம் பெற அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது, ஓ.பன்னீசெல்வமும் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மீது ஓபிஎஸ்-க்கு ஏன் இத்தனை அக்கறை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், வாழ்த்து சொன்னது ஒரு குத்தமாப்பா… இது எல்லாம் அரசியல் நாகரீகம் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 449

0

0