அதிமுக அவைத்தலைவர் பதவிக்கு இஸ்லாமியர்… ஓபிஎஸ் – இபிஎஸ்ஸின் மாஸ்டர் மூவ் … இதுதான் காரணமா..?
Author: Babu Lakshmanan9 August 2021, 5:07 pm
பொதுவாக அவைத் தலைவர் என்பது ஒரு அரசியல் கட்சியின் முக்கியப் பொறுப்பாகும். கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய பொதுக்குழு மற்றும் செயற்குழுக்களை வழிநடத்தும் அதிகாரம் கொண்டதாகும். அதுமட்டுமில்லாமல், வேட்பாளர் நேர்காணல் மற்றும் கட்சியின் தலைமையுடன் அமர்ந்து வேட்பாளரை தேர்வு செய்யும் பவரும் கொண்ட பதவியாகும்.
அதிமுகவில் அப்படிப்பட்ட அதிகாரமிக்க பதவியைத்தான் மதுசூதனன் வகித்து வந்தார். அவர் கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதன் காரணமாக அந்த பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை கைப்பற்ற அதிமுக தரப்பில் பல்வேறு சீனியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளிகளான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, ஜெயக்குமார், அன்வர் ராஜா மற்றும் தமிழ் மகன் உசேன் போன்றவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய திருப்பமாக அதிமுகவில் காலியாக உள்ள அவைத்தலைவர் பதவிக்கு இஸ்லாமியர் ஒருவரை நியமிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக கவுண்டர்கள் உள்பட ஒரு சில சமுதாயத்தினருக்கே அதிமுக முக்கியத்துவம் கொடுப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அது உண்மையில்லை, அதிமுக அனைத்து தரப்பினருக்குமானது என்பதை நிரூபிக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவருக்கும் மிகவும் நெருக்கமானவராகவும், எம்ஜிஆர் காலத்து சீனியருமான தமிழ்மகன் உசேனை அதிமுக அவைத் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
அவைத் தலைவர் பொறுப்பிற்கு இஸ்லாமியரை நியமிப்பதன் மூலம் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் திமுகவுக்கு அதிமுக கடும் நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுல்லை.
0
0