ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை : ஓபிஎஸ் உருக்கம்

6 May 2021, 12:15 pm
OPS - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களை பிடித்து எதிர்கட்சியாக உள்ளது. இந்த நிலையில், தமிழக தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது :- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிறந்த எதிர்க்கட்சியாக ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்ற பெரும் பொறுப்பை அதிமுகவுக்கு தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அரசியலில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். ஆனால், இப்போது வந்திருப்பது வெற்றி கலந்த தோல்வி. அதிமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியிட்டு சிலர் மகிழ்ந்தனர். ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை. ஒருபோதும் இழக்க மாட்டோம் என்பதைத்தான் நமக்கு கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கையும், நாம் வாங்கிய வாக்குகளும் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழகத்தை தலைநிமிர செய்வதற்கும், தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கும், ஏழை- எளியோர் ஏற்றம்பெற செய்வதற்காகவும் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டதுதான் அதிமுக அவரது கொள்கைகளை இதயத்தில் ஏந்தி தமிழ்நாட்டை வளம் பெற செய்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது விசுவாச தொண்டர்களான நாம் நேர்மையான ஆட்சியை, தூய்மையான ஆட்சியை, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்தோம். எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கினோம். வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றினோம். கொடுத்த வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி என்பது மக்களுக்கு தெரியும். மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக்கொள்பவர்கள் நாம். அந்த உயரிய பண்புடன் தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு புதிய ஆட்சிக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு, எனக்கு வாக்களித்து தொடர்ந்து எங்களுக்காக உழைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர்களுக்கு வார்த்தையில் அடங்கா ஆயிரமாயிரம் கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன். மீண்டும் நமது உழைப்பை அர்ப்பணித்து ஜனநாயக கடமைகளை தொடர்ந்துகொண்டிருப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம், என அவர் கூறியுள்ளார்.

Views: - 175

0

0