‘சற்று எழுந்து நின்று செய்திருக்கலாம்’ : அமைச்சர் துரைமுருகனின் செயலால் அதிகாரிகள் அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
30 July 2021, 11:35 am
Quick Share

சென்னை : மூத்த பொறியாளர் எழுதிய புத்தகத்தை இருக்கையில் அமர்ந்தபடியே அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட நிகழ்வால் அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவராக பணியாற்றி வருபவர் ஓய்வுபெற்ற பொறியாளர் சுப்பிரமணியன். 1970 முதல் 2018ம் ஆண்டு வரையில் காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்து, ‘காவிரி நதிநீர் பிரச்னை – உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம்’ என்ற புத்தகத்தை சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். அவரது அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்தபடி, புத்தகத்தின் முதல் பிரதியை, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா நின்றபடி பெற்றுக் கொண்டார்.

மூத்த பொறியாளர் எழுதிய புத்தகத்தை அமைச்சர் சற்று இருக்கையை விட்டு எழுந்து வெளியிட்டிருக்கலாம் என்றும், இருக்கையில் அமர்ந்தவாறு புத்தகத்தின் பிரதியை ஐ.ஏ.எஸ்., அதிகாரி நின்று கொண்டு பெற்றதும் சக அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கொடுத்த மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்தபடி பெற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏக்களின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஆட்சியர் மனுவை எழுந்து பெற்றனர். இந்த வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த செயலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Views: - 240

0

0