பள்ளி, கல்லூரிகளை திறக்க பெற்றோர் எதிர்ப்பு: மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்….!!

12 November 2020, 8:56 am
madurai court- updatenews360
Quick Share

மதுரை: பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான பெற்றோரின் கருத்தாக உள்ளது என மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்பதே பெரும்பாலான பெற்றோரின் கருத்து என மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு திறக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராம்பிரசாத், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வரை எந்த வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதற்கிடையே தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக விடுதிகள் திறக்கப்படும் எனவும் அரசு தெரிவித்தது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், புறநகர் ரெயில்கள் இயங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகளில் கொரோனா வைரஸ் 2ம் கட்டமாக அதிக அளவில் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்தால் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.

இதனால், வருகிற 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறக்கலாம். அண்டை மாநிலங்களில் என்ன நிலை உள்ளது? என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு செய்வது அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 27

0

0