TNPSC தேர்வில் குளறுபடி.. குரூப் 2 தேர்வை ரத்து செய்து மறுதேர்வை நடத்திடுக ; தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
27 February 2023, 4:02 pm
Quick Share

கடந்த 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும என்று தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வும் நடைபெற்றன.

பல்வேறு இடங்களில் நடந்த குரூப் 2 தேர்வில், தேர்வர்களின் பதிவெண் மாறியதால், தேர்வு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், வினாத்தாளை பார்த்தவர்கள் விடைகளையும் பார்த்திருப்பார்கள் என்பதால், தேர்வில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும என்று தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் 25.02.23 – சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது,அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது

TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 356

0

0