சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மரணம் : குடியரசு தலைவருக்கு எதிர்கட்சி தலைவர்கள் கடிதம்

6 July 2021, 7:48 pm
stan_swamy_NIA_Arest_UpdateNews360
Quick Share

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி (84) சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவர் உடல்நலக்குறைவால் காலமானார். சிறையில் இருந்த அவர் உயிரிழந்ததற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் பார்கின்சன் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஸ்டேன் சுவாமிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்த பிறகே அவருக்கான உணவுகள் வழங்கப்பட்டன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் அளிக்கப்படவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு தான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமூல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

Views: - 100

0

0