அன்று தமிழக அரசு… இன்று காவல்துறையா..? மாற்றி மாற்றி பேசும் திருமாவளவன்… தோழமை சுட்டுதலை விமர்சிக்கும் எதிர்கட்சிகள்..!!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 6:26 pm
VCK - police - updatenews360
Quick Share

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் கே.மோரூர் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பம் நடுவதற்கும், கடந்த 17ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஏற்கனவே இருக்கும் திமுக, அதிமுக கொடி கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கே.மோரூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் தடையை மீறி கொடிக்கம்பம் நடுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தடுத்துள்ளனர். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போர்க்களம் போல மாறியது.அப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து வரும் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் வழக்கமானது ஒன்றாக இருந்தாலும், அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவு தற்போது சர்ச்சைகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

அதாவது, “மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதில், காவல்துறையின் தலித் விரோதப் போக்கு என அவர் குறிப்பிட்டிருப்பதுதான் தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக அதிமுகவின் ஆட்சி நடந்து வந்தது. அப்போது, வரை காவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த திருமாவளவன், தமிழக அரசைக் குறிப்பிட்டே, தனது கருத்துக்களை கூறி வந்ததாகவும், ஆனால், தற்போது தலித் விரோதப் போக்கை கடைபிடிக்கும் காவல்துறை என்று அவர் தற்போது கூறியிருப்பது ஏன்..? என்று எதிர்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது :- கடந்த ஆட்சியின் போது காவல்துறை மட்டுமல்லாமல், வேறு எந்தத் துறையினர் தவறு செய்தாலும், தமிழக அரசைக் குறை சொல்வதும், கண்டனம் தெரிவிப்பதுமாகவே இருந்தார் திருமாவளவன். ஆனால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்து வரும் நிலையில், சாதி வெறியர்களுக்குத் துணைபோன காவல்துறையினர், தலித் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதாகக் குற்றம்சாட்டுகிறார். இதற்கு அவர் தமிழக அரசையோ அல்லது முதலமைச்சர் ஸ்டாலினையோ அல்லவா..? குறை சொல்லி இருக்க வேண்டும்.

ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. தமிழக அரசின் அறிவிப்பால் பொதுமக்களுக்கோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோ பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தோழமை சுட்டுதலை கடைபிடித்து வருகிறார். இந்த விவகாரத்திலும் அவர் அதனையே கடைபிடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தும் வகையில், பல்வேறு கொலைகள் அரங்கேறி வருகின்றன. வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் செயலாளர் வசீம் அக்ரம் முதல் தாம்பரம் ஸ்வேதா வரையில் எண்ணற்ற கொலைகள் நிகழ்ந்து விட்டன. ஆனால், இது தொடர்பாக அவர் வாய் திறக்கவே இல்லை. இதுவே அதிமுக ஆட்சியில் நிகழ்ந்திருந்தால் பொரிந்து தள்ளியிருப்பார்.

நாடாளுமன்றம் உறுப்பினரான இவர் தனது கட்சியினருக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்று கரார் காட்டிய திருமாவளவன், அதே உத்வேகத்தை தற்போதும் அரசுக்கு எதிராக வெளிப்படுத்த வேண்டும். ஆனால் ஒன்று புரிகிறது. திருமாவளவனுக்கு மக்களின் நலனை விட, கூட்டணி தர்மமே முக்கியம் என்பது தெள்ளத் தெளிவாகிறது, எனத் தெரிவித்தனர்.

Views: - 486

0

0