2024 தேர்தலில் காங்கிரசுக்கு கல்தா…? 3-வது அணிக்கு எதிர்க்கட்சிகள் தீவிரம்!

Author: Babu
2 August 2021, 7:34 pm
3rd team - updatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது. ஆளுங்கட்சி தயாராகி விட்டதோ இல்லையோ, எதிர்க்கட்சிகள் வரிந்து கட்ட ஆரம்பித்து விட்டன.

திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட14 கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இதில் எத்தனை கட்சிகள் கடைசி வரை, உறுதியாக இருக்கும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் 2023-ம் ஆண்டே நாடாளுமன்றத் தேர்தலை மத்திய பாஜக அரசு நடத்திவிடும் என்று ஒரு தகவல் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதாவது, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைவதற்குள் தேர்தலை மோடி அரசு நடத்தி முடித்துவிடும் என்ற பேச்சு உள்ளது.

காங்., தலைமைக்கு தயக்கம்

அதேநேரம் போன் ஒட்டுக்கேட்கப் பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள், 2024 தேர்தலில் தங்களுடைய தனித் தன்மைகளை விட்டுக்கொடுத்து ஒருங்கிணைந்து போட்டியிடுமா? என்பதும் கேள்விக்குறிதான்.

இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் தலைமையில் சமாஜ்வாடி தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுவதுதான். 2014 தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 தேர்தலில், 52 தொகுதிகளில் வெற்றி கண்டது.

Rahul_Sonia_UpdateNews360

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மொத்த எம்பி தொகுதிகளை கணக்கிட்டால் அதற்கு மிக அருகில் கூட காங்கிரஸ் வரவில்லை. அந்த மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.
அதாவது ஒரு மாநிலத்தில் மொத்தமுள்ள எம்பிக்களின் எண்ணிக்கை அளவிற்கு கூட வெற்றி பெறாத ஒரு கட்சியின் தலைமையை ஏற்பதா? என்ற தயக்கம் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக்கு உள்ளது.

“தற்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால் ராகுல் அல்லது பிரியங்கா தலைமையை ஏற்பது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது” என்று அக்கட்சி பூடகமாக கூறுகிறது.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அந்தத் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான், சமாஜ்வாடி காங்கிரசின் தலைமையை ஏற்குமா? இல்லையா? என்பது தெரியவரும்.

ஸ்டாலின் சந்தேகம்

கம்யூனிஸ்டுகளோ, எல்லாவற்றுக்கும், “ஆமாம் சாமி” போடவேண்டிய நிலையில் உள்ளனர். மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பது குதிரை கொம்பான விஷயம். கேரளாவில் காங்கிரஸ் கடும் போட்டியை கொடுக்கும். இந்த 2 கட்சிகளில் யார் வெற்றி பெற்றாலும் அது தேசிய அளவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது.

செல்போன்கள் ஒட்டுக்கேட்க பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கடந்த வாரம், நாடாளுமன்றத்தில் “நீதி வேண்டும் நீதிவேண்டும்” என்று அத்தனை எதிர்க்கட்சிகளும், சொல்லி வைத்தாற்போல் தமிழில் கோஷமிட்டன. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் இந்த யோசனையை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

Stalin Olympic- Updatenews360

இதேபோல் பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளமும் தலைமைக்கு காங்கிரஸ் பொறுப்பேற்கும் விவகாரத்தில் தங்களுடைய தெளிவான நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இந்த மாநிலத்தில் அக்கட்சியின் தயவைத்தான் காங்கிரஸ் நம்பியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜியும், அவருடைய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் தீவிர ஆர்வம் காட்டினாலும் கூட, கூட்டணிக்கு தலைமை ஏற்க போவதில்லை என்பதை மம்தா வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

காங்., இல்லா 3வது அணி

இப்படி ஒவ்வொரு கட்சியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்க தயக்கம் காட்டி வரும் நிலையில், தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ், அரியானா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள இந்திய தேசிய லோக் தளம் ஆகியவை தற்போது இன்னொரு புதிய கோணத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 3 கட்சிகளில் ஆம் ஆத்மிக்கும், பகுஜன் சமாஜுக்கும் டெல்லி, அரியானா,பஞ்சாப், உத்தரபிரதேசம் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் 14 எதிர்க்கட்சிகள் கூட்டணியில் தங்கள் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று இவை புலம்புகின்றன. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் இல்லாமலேயே பலம்வாய்ந்த மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கவும் இந்தக் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மாயாவதி, கெஜ்ரிவால், ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து பாஜக.வுக்கு எதிராக 3-வது அணி அமைக்க அரியானா மாநில முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா காய்களை நகர்த்தி வருகிறார்.

அரியானாவில் அதிகமுள்ள ஜாட் சமூக மக்களின் அரசியல் கட்சியாக இருப்பதுதான் இந்திய தேசிய லோக் தளம். ஓம் பிரகாஷ் சவுதாலா, அரியானா மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார். இவரது தந்தை தேவிலால், 1990களில் விபி சிங்கின் மத்திய அமைச்சரவையில், துணைப் பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான 3-வது அணி அமைப்பது தொடர்பாக, ஓம் பிரகாஷ் சவுதாலா அண்மையில், டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகியையும் அவர் சந்தித்து பேசினார். பின்னர் அக்கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமாரிடமும் தியாகி போனில் பேசி இருக்கிறார்.

ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.

காங்கிரஸ் இல்லாத இந்த அணிக்காக நிதிஷ்குமார் தவிர, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவ், பஞ்சாபின் சிரோமணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரையும் ஓம் பிரகாஷ் சவுதாலா அடுத்தடுத்து சந்திக்க உள்ளார். இவர்கள் அனைவரையும் 3-வது அணியில் இடம்பெற வைக்க அவர் தீவிர முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.

இந்த பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், உத்தர பிரதேச முன்னாள் முதல் அமைச்சரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி ஆகியோரையும் சேர்க்க ஓம் பிரகாஷ் சவுதாலா திட்டமிட்டு உள்ளார். பிறகு இவர்கள் அனைவரையும் சேர்த்து அரியானாவில் ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

அதிர்ச்சியில் சோனியா

இதுகுறித்து இந்திய தேசிய லோக்தளம் கட்சியின், நிர்வாகிகள் கூறும்போது,‘‘நம் நாட்டில் முதன்முதலில் மூன்றாவது அணிக்கான அச்சாரம் அரினாவில் போடப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான எங்கள் கட்சி நிறுவனர் தேவிலாலின் பிறந்த நாள் அடுத்த மாதம் 25-ந் தேதி வருகிறது. அன்று மீண்டும் ஒரு புதிய 3-வது அணி உருவாகிவிடும். பாஜகவை காங்கிரஸ் எதிர்க்க விரும்பினால் அவர்களும் இந்த கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் வராவிட்டாலும் கூட பரவாயில்லை. மூன்றாவது அணி நிச்சயம் வலுவாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டனர்.

காங்கிரஸ் இடம் பெறாமலேயே, ஒரு வலுவான மூன்றாவது அணி உருவாக இருப்பதை அறிந்த சோனியாவும், ராகுல் காந்தியும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

Sonia_Gandhi_UpdateNews360

காங்கிரஸ் தலைமையில் வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமையாமல் போனால், 3-வது முறையாக ஆட்சியை பாஜக எளிதில் கைப்பற்றி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

கடந்த வாரம் வரை, மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டவேண்டும் என்று கூடிக்கூடி பேசிய தலைவர்கள், திடீரென்று காங்கிரஸ் விரும்பினால் இந்த கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று டிராக் மாறுவது,காங்கிரசை மெகா கூட்டணியில் இருந்து கழற்றி விடுவது போலவே இருக்கிறது.

மாநில கட்சிகளின் ஆதிக்கம்

இதுபற்றி டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “மோடியையும், பாஜகவையும் தேர்தலில் எதிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எதிர்க்கட்சிகளிடம் வலுவாக உள்ளது. ஆனால் அதைப்பற்றி விரிவாக பேசும்போது அதை செயல்படுத்த முடியாமல் அவை தடுமாறுகின்றன. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மொத்தம் 21 உள்ளன. இவை அனைத்தும் முதலில் ஒன்றாக சேர்ந்து 2024 தேர்தலை சந்திக்கவேண்டும். ஒருங்கிணைவதில் வெற்றி கண்டால் மட்டுமே தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும்.

அதேநேரம் 40, 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் காங்கிரசுக்கு முன்னுரிமை கொடுக்க எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அதனால் தங்கள் அணியில் இருந்து காங்கிரசை கழற்றி விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன.

காங்கிரஸின் உதவி இல்லாமலேயே, 290 தொகுதிகள் வரை ஜெயித்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கணக்கு போடுகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆதரவு கிடைக்காமல் போனால், மூன்றாவது அணி வழக்கம்போல் 100 இடங்களுக்குள்தான் வெற்றி பெறும் சூழல் இருக்கிறது என்பதே எதார்த்தம்.

எதிர்க்கட்சிகள் அணியில் காங்கிரசின் கை ஓங்கி விடக்கூடாது என்பதற்காக சமாஜ்வாடி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்றவை காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்கும் நிலையே ஏற்படும். இப்படி ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் இருப்பதால் எதிர்க்கட்சிகள் கூட்டணியைப் பொறுத்தவரை மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். அது, 2024 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக அமைய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 239

0

0