ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்துகளை கூடுதலாக வழங்குங்க : பிரதமருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…!!

15 May 2021, 3:53 pm
EPS_Modi_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் தடுப்பூசிகளின் டோஸ்களை அதிகரித்து வழங்க பிரதமர் மோடிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நிலவி வரும் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையினால் உயிர்பலியும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மேலும், வடமாநிலங்களில் நிலவியதை போன்று, தகனம் செய்வதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

மேலும், கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக இடைவெளியை மறந்து அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நின்று மருந்துகளை பெற வேண்டிய சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கொரோனா தொற்றின் 2வது அலைக்கு தமிழகத்தில் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தற்போது வரை நாளொன்றுக்கு 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவல் அதிகரித்து வருவதால், இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை மற்றும் ஐசியூ படுக்கைகள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, மருத்துவமனைகளில் சேருவதற்காக நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கொரோனா தடுப்பு மருத்துவ உதவிகளான ஆக்சிஜன், ரெம்டெசிவர் மற்றும் தடுப்பூசிகளின் டோஸ்களை தமிழகத்திற்கு அதிகரித்து வழங்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 176

0

0