ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு..! சபாநாயகர் கோரிக்கை ஏற்பு
10 August 2020, 6:34 pmடெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க சபாநாயகர் அவகாசம் கேட்டதால் வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது 2017ம் ஆண்டு பிப். 18ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக ஓட்டு போட்டனர்.
அவர்களை தகுதி நீக்க கோரி திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், ரங்கசாமி ஆகியோரும் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், 2018 ம் ஆண்டு ஏப்.7ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தவோ முடியாது என்று தெரிவித்தது. எனவே தகுதி நீக்க கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந் நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குக்கு பதிலளிக்க சபாநாயகர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.