இங்கே பட்ஜெட்டை ஓபிஎஸ் வாசிக்க, வாசிக்க…. அங்கே உச்ச நீதிமன்றத்தில் திக்,திக் நிமிடங்கள்…!

14 February 2020, 12:11 pm
Quick Share

சென்னை: ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

சட்டசபையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி கொண்டு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்எல்ஏக்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.

இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று  தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது.

சட்டசபை சபாநாயகர், அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைப்பதாக கூறினர்.

மேலும், சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது,கால அவகாசம்  பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.