பாஜகவை குழப்பத்தில் தள்ளிய ஓபிஎஸ் : இடைத்தேர்தல் நாடகம் எடுபடுமா?

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 8:18 pm
Bjp Vs Ops - Updatenews360
Quick Share

அடுத்த மாதம் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட ஒன்று.

சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்

அதேநேரம் தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டோடு சூடாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனது வேட்பாளரை நிறுத்தும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்காக அவர், உடனடியாக 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாஜக, தமாகா, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தலைவர்களை அந்தந்த கட்சிகளின் அலுவலகங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோரை அனுப்பி வைத்து ஆதரவும் திரட்டினார்.

ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

அதுவரை இடைத்தேர்தல் பற்றி எந்தவொரு கருத்தையும் வெளியிடாமல் இருந்த
ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இதனால் பதறிப் போய், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து திடீரென விழித்துக் கொண்டவர்கள் போல் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டனர்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இபிஎஸ் தரப்புடன் இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்.

அண்ணாமலையை சந்தித்த ஓபிஎஸ்

அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை எங்கள் சட்டப் போராட்டம் தொடரும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஏற்கனவே தனது ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு உறுதியாக தெரிவித்துவிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனையும் ஓ பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அவசர கதியில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

பாஜகவை குழப்பத்தில் ஆழ்த்திய ஓபிஎஸ்

பாஜக போட்டியிட்டால் நாங்கள் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியிருப்பது தமிழக பாஜகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஒரு நெருக்கடியான சூழலுக்கு தள்ளிவிட்டு இருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனதுக்குள் குதூகலம் கொண்டிருப்பார்கள் என்பதும் நிச்சயம்.

ஆனால் அரசியல் வட்டாரத்திலோ இது ஓ பன்னீர்செல்வம் மிகவும் பலவீனமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அவர் தனது ஆதரவை பாஜகவுக்கு அளிக்கிறேன் என்று கூறியிருப்பது வேடிக்கையான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

அதற்கு அரசியல் விமர்சகர்கள் கூறும் காரணங்களும், ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவே இருக்கின்றன.

ஓபிஎஸ் கோபம் தான் காரணமா?

“ஏனென்றால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டவர்களில் 66 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்ட போதே, அதற்கு இபிஎஸ்ஸின் கடுமையான உழைப்பும், பிரச்சாரமும் தான் காரணம் என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் நன்கு அறிவார்கள். அப்போது பெயரளவிற்கு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாரே தவிர தேர்தல் பிரச்சாரத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக தன்னை கட்சி அறிவிக்கவில்லையே? என்ற கடும் கோபம்தான் இதற்கு முக்கிய காரணம் என்பதும் அதிமுக தொண்டர்களுக்கு தெரியும்.

தவிர திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓபிஎஸ்சின் போக்கு முற்றிலும் மாறிப்போனது. சிறுவயதில் நான் கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி படத்தின் புத்தகத்தை எப்போதும் தலையணைக்கு அடியில் வைத்து படுத்திருப்பேன் என்று சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டியதையும், அவருடைய மகன் ரவீந்திரநாத் எம்பி, தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியதுடன் அவருடைய ஆட்சியை வெளிப்படையாக புகழ்ந்து தள்ளியதையும் அதிமுக தொண்டர்கள் ஒருவர் கூட ரசிக்கவில்லை என்பதுதான் நிஜம்.

ஓபிஎஸ்சை மன்னிக்க மாட்டார்கள்

அதுவும் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கால்களால் எட்டி உதைத்து, உடைத்துக் கொண்டு திபு திபு என்று உள்ளே நுழைந்தபோது அவரும் அதைப் பார்த்து, ரசித்து சிரித்துக்கொண்டே அவர்கள் பின்னால் சென்ற டிவி நேரலை காட்சிகளை எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்திட்ட பெருத்த அவமானமாகவே ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கருதுகிறான்.

அதுமட்டும் அல்லாமல் அன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தையே சூறையாடி, கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்ற காட்சியையும் உண்மையான அதிமுக தொண்டர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஓ பன்னீர்செல்வம்தான் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களும் தன் பக்கம் இருப்பதாக கூறிக் கொள்கிறார். இந்த கொடூர சம்பவத்தை அவர்கள் முற்றிலும் மறந்து விட்டிருப்பார்கள் என்றும் தப்புக் கணக்கு போடுகிறார். ஓபிஎஸ்சை ஒருபோதும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரின் ஆன்மாவும் மன்னிக்காது. கட்சி தொண்டர்களும் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

ஓபிஎஸ் அந்தர் பல்டி

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் வெடித்த போது பொதுக்குழு தொடர்பான வழக்கை ஓபிஎஸ் முதன்முதலாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றார். அப்போது, இபிஎஸ் ஓபிஎஸ் இருவரிடமும் நீங்கள் இனி ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது ஆம், அது எப்போதும் சாத்தியமல்ல என்று ஓபிஎஸ்சும்தான் சேர்ந்து சொன்னார். ஆனால் இப்போது இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறார்.

இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசும் ஒருவர் சொல்வதை தமிழக பாஜக எப்படி ஏற்றுக்கொள்ளும்?… புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என் மீது படுத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று அலறுவது போலத்தான் இது உள்ளது. அதிமுக தொண்டர்களிடம் அடியோடு செல்வாக்கை இழந்துவிட்ட ஓபிஎஸ் பாஜக மூலம் மஞ்சள் குளிக்கப் பார்க்கிறார் என்பதே உண்மை.

இபிஎஸ் கடந்த ஏழு மாதங்களில் திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பால் விலை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதுபோல ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அவரிடம் தொண்டர்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இப்படி திமுகவின் முழு நேர விசுவாசியாகவே மாறிவிட்ட அவர் சொல்வதை பாஜக ஏற்றுக்கொண்டால் இழப்பு அந்த கட்சிக்குதான்.

இபிஎஸ்க்கு பாஜக ஆதரவு?

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என்று ஓபிஎஸ் கூறுவதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில், தன் பின்னால் பாஜக வர வேண்டும் என்று அவர் விரும்புவது நன்றாக தெரிகிறது. அப்போது இபிஎஸ் பக்கம் சென்றால், திமுக கூட்டணிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும், வெற்றியும் பெறலாம் என்று பாஜகவினர் பெரும்பாலானோர் கருதும் நிலையில் பாஜக இபிஎஸ்க்கு ஆதரவை தெரிவிக்கும் வாய்ப்புகளே அதிகம்.

ஆனால் அப்படி நடந்து விடக்கூடாது. மீறி அது நடந்து விட்டால் தனக்கும், தன் மகனுக்கும் அரசியலில் எதிர்காலமே இல்லாமல் போகும் என்று பயந்துதான் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். எங்கள் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இது குழம்பிய குட்டையில் மீன் பிடித்த கதைதான்.

இபிஎஸ்ஐ பொறுத்தவரை, தனது தலைமையிலான அணி தான் உண்மையான, வலுவான அதிமுக என்பதை நிரூபிப்பதற்காக நிச்சயம் வேட்பாளரை நிறுத்துவது உறுதி. ஓபிஎஸ்க்குத்தான் இதில் சிக்கல். அதனால் தான் பாஜகவை கொம்பு சீவி விடப் பார்க்கிறார். இடைத் தேர்தலில் போட்டியிடலாமா?… வேண்டாமா?…என்ற
குழப்பத்திற்கும் பாஜகவை தள்ளுகிறார்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 259

0

0